பிலிப்பைன்சில், அமிலம் வைத்திருந்த வாளிக்குள் விழுந்த ஆறு மாத குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
Bacolod நகரில் காய்கறிக்கடை வைத்திருந்த ஒரு குடும்பம், களைப்பின் காரணமாக அன்று கடையிலேயே தூங்க முடிவு செய்தது.
அனைவரும் கடைக்குள்ளேயே உறங்க, அந்த ஆறு மாதக் குழந்தை தூக்கத்திலிருந்து விழித்து எழுந்து, அங்கும் இங்குமாக தவழ்ந்து சென்றிருக்கிறது.
பின்னர் தூக்கத்திலிருந்து எழுந்து குழந்தையை தேடிய பெற்றோருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
கடையில் பாத்திரங்களில் பிடிக்கும் துருவை அகற்றுவதற்காக, ஒரு வாளியில் நீருடன் கலந்த அமிலத்தை வைத்திருந்திருக்கின்றனர்.
அந்த குட்டிப் பெண் அந்த வாளிக்குள் எட்டிப் பார்க்கும்போது தவறி விழுந்திருக்கிறாள்.
கதறி அழுத பெற்றோரால் எந்த அசைவுகளுமின்றி கிடந்த குழந்தையின் உடலை மட்டுமே மீட்க முடிந்திருக்கிறது.
அவர்கள் உடனடியாக குழந்தையை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, அவளை பரிசோதித்த மருத்துவர்கள் அவள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
குடும்பத்தாரின் பெயர்களை வெளியிட மறுத்துள்ள பொலிசார், விசாரணையைத் தொடர்ந்தாலும், குழந்தையின் மரணம் குறித்து அதன் பெற்றோர் கூறிய காரணத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.