இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் பிறப்பு எவ்விதத்தில் இருக்கின்றதோ, அவ்விதத்தில் இறப்பு இருப்பது இன்றியமையாத ஒன்றாகும். உலகில் தோன்றிய அனைத்து உயிர்களும் ஒருநாள் இறக்க வேண்டும் என்பது உலக நியதியும்கூட. அதுவே இயற்கையின் தர்மமும் கூட. இதில் எந்த விதிவிலக்கும் இல்லை. ஓரறிவு உயிரினங்கள் ஆனாலும் சரி அல்லது ஆறறிவு உயிரினங்கள் ஆனாலும் சரி அவர்களுக்கு இறப்பு என்பது இன்றியமையாத ஒன்றாக இருப்பதாகும்.
ஆனால், நடைமுறையில் ஆறறிவு படைத்த உயிரினங்கள் தங்களது மரணத்தை தள்ளி வைக்கக்கூடிய சூழல்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். அதாவது நவீனகால மருத்துவ சிகிச்சைகளின் மூலம் ஒருவருக்கு ஏற்படக்கூடிய மரணமானது ஒரு குறிப்பிட்ட நாளில் இருந்து குறிப்பிட்ட நாள் வரை தள்ளி வைக்கப்படுகிறது. இதற்கும் அவர்களது ஜாதக ரீதியான அமைப்புகள் இருந்தால் மட்டுமே இது சாதகமாக அமைகின்றது.
ஒருவருக்கு மரணம் ஏற்பட வேண்டும் என்றால் அவருடைய ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகள் மாரக ஸ்தானத்தில் இருந்து செயல்பட்டால் மட்டும்தான் அவருக்கு இறப்பு என்பது நடைபெறுகின்றது. இது தம்பதிகளாய் இருந்தாலும் பொருந்தக்கூடிய ஒன்றாகும்.
தம்பதிகளாக இணைந்த பின் ஏற்படும் எதிர்பாராத சில விபத்துக்கள் அல்லது நிகழ்வுகளால் உயிர்சேதம் அவ்விடத்தில் நிகழுமாயின் அது முழுக்க முழுக்க அவரவர் ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகள் ஏதெனும் ஒரு விதத்தில் ஆயுள் பாவகத்தை தொடர்புக்கு கொள்ளும்போது நிகழக்கூடியதாகும்.
முன்காலங்களில் தம்பதியருக்குள் ஏதேனும் ஒரு காரணத்தினால் மணமகன் இறந்தால் அது மணமகள் வந்த நேரமே என்று மக்கள் குறை கூறுவார்கள். இது முழுக்க முழுக்க தவறேயாகும். ஏனெனில் ஒருவரின் மரணம் அவருக்கு நேர வேண்டும் என்று விதி இருக்குமாயின் அவருடைய ஜாதக அடிப்படையில் உள்ள கிரக அமைப்புகள் செயல்பட்டால் மட்டுமே தான் அவருக்கு மரணம் என்பது நிகழ்கின்றது.
சில நேரங்களில் தம்பதிகளாக இணைந்த பின்பு மணமகனின் ஆயுள் பாவகம் மணமகளின் ஜாதகத்தில் பலமாக இருக்கும் பட்சத்திலும், மணமகளின் மாங்கல்ய ஸ்தானம் பலமாக இருக்கும் பட்சத்தில் மணமகனுக்கு ஏற்படக்கூடிய மரண கண்டமானது சிறு விபத்துக்கள் ஆக மாறி பொருள் இழப்பை மட்டும் உருவாக்குகின்றது. ஒருவேளை ஒரு மணமகனின் ஆயுள் பாவகம் மணமகளின் ஜாதகத்தில் ஏதேனும் ஒருவிதத்தில் பலவீனமடைந்து மேலும் மணமகளின் மாங்கல்ய பலமும் குறைந்து இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு இடையே நடக்கும் திசாபுத்திகளின் அடிப்படையிலேயே அவர்களுக்கு ஏற்படும் இழப்புகள் ஏற்படுகின்றன.
அதாவது மணமகனின் ஜாதகத்தில் திசாபுத்தியானது மரண பாவகத்திற்கு எவ்வகையிலும் தொடர்பு கொள்ளாதபோது மணமகன் மற்றும் மணமகள் இடையே அடிக்கடி சிறுசிறு கருத்து வேறுபாடுகளும், மனவருத்தங்களும் ஏற்படும். ஆனால், மரணம் என்பது ஏற்படுவது இங்கு கிடையாது.