உலகக் கோப்பையில் இதை ஏற்றுக்கொள்ள முடியாது: சங்கக்கார

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் ஆடுகளங்கள் குறித்து இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்கார தனது அதிருப்தியை வெளிபடுத்தியுள்ளார்.

ஆடுகளம் தொடர்பில் சங்கக்கார கூறியதாவது, சர்வதேச கிரிக்கெட்டில் நடைபெறும் இவ்வாறான மிகப்பெரிய தொடர் ஒன்றில் சீரானதும் நடுநிலையானதுமான ஆடுகளங்களை வழங்குவது மிக முக்கியமாகும்.

சீரற்ற காலநிலையின் போது மைதானங்களை இலங்கையைப் போன்று முழுமையாக மூடுவது இலகுவான விடயமல்ல. அதற்கு அதிகமான மனிதவளம் தேவைப்படுகிறது. இருப்பினும், இவ்வாறான தொடரின் போது, சீரற்ற காலநிலையிலிருந்து கிரிக்கெட்டை பாதுகாப்பதற்கு இதுபோன்ற விடயங்களை செய்ய வேண்டும்.

ஆனால், சில ஆடுகளங்கள் வேறுபாடுகளுடன் அமைக்கப்பட்டிருக்கின்றன. குறித்த ஆடுகளங்கள் மாற்றப்பட வேண்டும். இதன் காரணமாக சில அணிகள் தங்களுடைய அதிருப்திகளை வெளிப்படுத்தியது ஏற்றுக்கொள்ள முடிகிறது.

இங்கிலாந்தின் மைதானங்களில் சிறந்த வடிகாலமைப்பு இருந்தாலும், ஒரு சில மைதானங்களில் நடைபெறவுள்ள போட்டிகள் ஈரத்தன்மையால் கைவிடப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை ஜம்பவான் சங்கக்கார தெரிவித்துள்ளார்.