298 பேர் பலிக்கு யார் காரணம்: வெளியானது உண்மை

2014ம் ஆண்டு ரஷ்யா-உக்ரைன் இடையே மலேசியாவின் எம்எச்-17 பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விடயத்தில் நான்கு சந்தேக நபர்களின் பெயரை நெதர்லாந்து தலைமையிலான விசாரணை குழு அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் வைத்து எம்எச்-17 என்ற மலேசியா ஏர்லைன்ஸிக்கு சொந்தமான பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில், விமானத்தில் பயணித்த 298 பேரும் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 196 பேர் நெதர்லாந்தை நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பாக சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட்டது. நெதர்லாந்து தலைமையில் அவுஸ்திரேலியா, பெல்ஜியம், மலேசியா மற்றும் உக்ரைன் கூட்டாக விசாரணையை முன்னெடுத்தது.

2016 ஆம் ஆண்டு விமானத்தை தாக்கிய ராக்கெட் லாஞ்சர் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டது என கண்டறியப்பட்டது. தற்போது, இத்தாக்குதலுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களின் பெயரை நெதர்லாந்து தலைமையிலான விசாரணை குழு வெளியிட்டுள்ளது.

இதில், மூன்று ரஷியர்களும், ஒரு உக்ரைன் நாட்டவரும் அடங்குவர். விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ரஷ்ய நாட்டினரான இகோர் கிர்கின், செர்ஜி டபின்ஸ்கி, ஒலெக் புலடோவ் மற்றும் உக்ரைன் நாட்டவர் லியோனிட் கார்சென்கோ ஆகியோருக்கு எதிராக குற்ற வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களுக்கு எதிரான நீதிமன்ற விசாரணைகள் 2020 மார்ச் 9 ம் திகதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சர்வதேச விசாரணையில் நம்பிக்கை இல்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.