வீட்டுக்கு அத்திவாரமிட்ட 7 பேர் கைது!

வவுனியா வடக்கு, கரப்புக்குத்தி பகுதியில் உள்ள வன இலாகாவின் எல்லையிடப்பட்ட பகுதியில் வீட்டு நிர்மாண பணிகளை மேற்கொண்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று வன இலாகாவினரும், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து குறித்த 7 பேரையும் கைது செய்தனர்.

வவுனியா வடக்கு, சின்னடம்பன் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட கரப்புக்குத்தி பகுதியில் வவுனியா வடக்கு பிரதேச செயலகம் மற்றும் தேசிய வீடமைப்பு அதிகாரசபை என்பன இணைந்து மக்களுக்கு காணிகளை வழங்கி வீட்டு திட்ட நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது வன இலாகவின் எல்லையிடப்பட்ட பகுதியில் மூன்று வீடுகளை அமைப்பதற்கு காணிகள் வழங்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் வீட்டுத்திட்ட பயனாளிகள் அத்திவாரம் போட்டுக் கொண்டிருந்த நிலையில் அங்கு சென்ற வன இலாகாவினரும், விசேட அதிரடிப் படையினரும் 7 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து அத்திவாரம் போடுவதற்கு கொண்டு சென்ற மண்வெட்டி உள்ளிட்ட உபகரணங்களையும் அவர்கள் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த 7 பேரையும் வவுனியா நீதிவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் குறித்த நபர்களை தலா 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளதுடன், வழக்கு விசாரணை எதிர்வரும் 9 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதேவேளை, குறித்த காணி தொடர்பில் வன இலாகாவினர் கடந்த மாதமும் இருவரை கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.