சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானம்…

அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதால் இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றம் உருவாகியுள்ள நிலையில், போருக்கு தயார் என்று ஈரான் அதிரடியாக தெரிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை ஈரான் கடற்படை வெளியிட்ட அறிக்கையில், எங்கள் வான்பகுதியில் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா விமானம் சுடப்பட்டது, இது எங்களின் தேசிய இறையாண்மையை மீறுவதாகவும், பிராந்தியத்தில் பதட்டத்தை அதிகப்படுத்த அமெரிக்கா முயற்சிப்பதாகவும் ஈரான் குற்றம் சாட்டியது.

ஆனால் அமெரிக்காவோ அது சர்வதேச வான்வெளிப் பாதையிலேயே பறந்தததாகவும், அதை ஈரான் சுட்டு வீழ்த்தியதாகவும் தெரிவித்தது.

ஈரானின் இந்த செயலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தி, ஈரான் மிகப் பெரிய தவறு செய்துவிட்டது என்று குறிப்பிட்டார். இதனால் இரு நாடுகளுக்கிடைய பதற்றமான சூழ்நிலை உருவாகி வருகிறது.

இந்நிலையில் ஈரான் நாட்டின் தளபதி அமெரிக்காவிற்கு ஒரு தெளிவான செய்தியை கூற விரும்புகிறேன் என்று ஹொசைன் சலாமி கூறியுள்ளார்.

அதில், எந்த நாட்டினருடன் போர் தொடுக்க எந்த நோக்கமும் இல்லை. ஆனால் அதே சமயம் நாங்கள் போருக்கும் பயப்படவில்லை, போருக்கு தயாராகவே இருக்கிறோம், அமெரிக்கா எங்கள் மீது இப்படி ஒரு முத்திரை குத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.

அவரின் இந்த உரை அரசு தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

கடந்த மே மாதம் ஹார்மஸ் கடற்பகுதியில் பஜைரா அருகே கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பும் மிகப்பெரிய மையத்தில் 4 எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலை ஈரான் பின்னணியில் ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்தியுள்ளனர் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.