கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் குளம் ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண் விவகாரத்தில், அவரது தந்தை கடந்த 2 ஆண்டுகளாக போராடி வருகிறார்.
எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த ஷாஜி வர்கீஸ் என்பவரின் மகள் மிஷேல். சி.ஏ. படித்து வந்த மிஷேல் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் திகதி தங்கியிருந்த விடுதியில் இருந்து அருகில் உள்ள தேவாலயம் சென்றுள்ளார்.
ஆனால் அதன்பிறகு விடுதிக்கு அவர் திரும்பவில்லை. இதனால் பெற்றோர்கள் அவர் காணாமல் போய்விட்டதாக கூறி பொலிசாரிடம் புகார் அளித்தனர்.
இந்த நிலையில் மறுநாள் மாலையே கொச்சி அருகே குளம் ஒன்றில் மிஷேல் சடலமாக மீட்கப்பட்டார்.
இவரது இறப்பு தற்கொலை என பொலிசார் கூறி வந்தனர். க்ரோனின் அலெக்சாண்டர் பேபி என்பவரைக் காதலித்ததாகவும், இதன் காரணமாகவே தற்கொலை செய்ததாகவும் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்தனர். மட்டுமின்றி க்ரோனினை கைது செய்தும் விசாரித்தனர். பின்னாளில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ஆனால் மிஷேலின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது குடும்பம் சந்தேகம் எழுப்பியது. மட்டுமின்றி இந்த விவகாரம் தொடர்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் போராடி வருகிறார் மிஷேலின் தந்தை ஷாஜி வர்கீஸ்.
தற்கொலைக்கான அடையாளங்கள் மிஷேலின் உடம்பில் இல்லை. கொலை செய்யப்பட்டிருப்பதற்கான அடையாளங்கள்தான் அவரது உடம்பில் இருக்கின்றன.
ஆனால், இதை காவல்துறை மறைத்து தற்கொலை என வழக்கு பதிந்துள்ளனர்’ எனக் குற்றம்சாட்டிப் போராடி வருகிறார் ஷாஜி வர்கீஸ்.
மேலும், மிஷேலின் முகத்தில் நகக்கீறல்கள் உள்ளன. இதேபோல் இரண்டு கைகளிலும் மற்றவர்களின் கைத் தடம் உள்ளது.
நீரில் மூழ்கியிருந்தால் ஒன்று உடல் அழுகியிருக்க வேண்டும் அல்லது மீன்கள் கொஞ்சமாவது கடித்திருக்க வேண்டும்.
ஆனால், எதுவுமே இல்லாமல் உடல் இரண்டு மணி நேரம் மட்டுமே நீரில் இருந்துள்ளதாக உடற்கூறாய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
மிஷேல் கடைசியாக தேலாலயத்திற்குப் போன பிறகுதான் காணாமல் போயுள்ளார். இறந்தபோது அவளிடம் இருந்த மொபைல் போன், அவரது பேக் என எதையும் பொலிசார் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.
மொபைல் கிடைத்திருந்தால் இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக இருந்திருக்கும். மேலும், கடைசியாக அவர் எங்கு சென்றார் என அவரது செல்போன் டவர் லொகேஷேனை வைத்துக் கண்டுபிடிக்கலாம்.
ஆனால், அதையும் பொலிசார் இதுவரை செய்யவில்லை. தற்கொலை எனக் கூறினாலும் இரண்டு வருடம் கடந்தும் இதுவரை இந்த வழக்கின் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யாமல் உள்ளது என தனது தரப்பு வாதங்களை நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளார் மிஷேலின் தந்தை ஷாஜி.
தற்போது கொலை என்கிற ரீதியில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர் பொலிசர். இதனால் இந்த வழக்கில் உள்ள மர்மம் விரைவில் விலகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.