மலேசியாவில் இருந்து தமிழகத்துக்கு வந்த இளைஞர் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு நேற்றிரவு ஏர் ஏசியா விமானம் புறப்பட்டது. அதில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (31) என்பவர் திருச்சிக்கு புறப்பட்டார்.
திருச்சி விமான நிலையத்தில் விமானம் இறங்கியதும், அதில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்றனர்.
ஆனால் ராமச்சந்திரன் மட்டும் இருக்கையில் தூங்கிய நிலையில் அமர்ந்திருந்தார். இதையடுத்து விமான பணிப்பெண்கள், அவரை எழுப்பிய போது எந்தவித உணர்வும் இல்லாமல் இருந்தார். உடனே பணிப்பெண்கள் விமான நிலைய மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து மருத்துவர்கள் விரைந்து சென்று ராமச்சந்திரனை பரிசோதித்தனர். அப்போது அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டுமென்றும் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகளை விமான நிலைய அதிகாரிகள் செய்தனர்.
ஆம்புலன்சில் ஏற்றுவதற்காக ராமச்சந்திரனை விமானத்தில் இருந்து இறக்கிய போது அவர் திடீரென மரணமடைந்தார். இதனால் விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனே இது குறித்து ராமச்சந்திரனின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் திருச்சி விமான நிலையத்திற்கு விரைந்து வந்து உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதனிடையே ராமச்சந்திரன் விமானத்தில் இருந்து இறங்கியதும் இறந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஆனால் ராமச்சந்திரனின் உறவினர்கள், விமானத்தில் வரும் போதே ராமச்சந்திரன் இறந்துள்ளார். விமான பணிப்பெண்கள் சரியாக கவனிக்காமல் இருந்துள்ளனர் என குற்றஞ்சாட்டினர்.
இது தொடர்பாக அவர்களிடம் விமான நிலைய இயக்குனர் குணசேகரன் மற்றும் பொலிசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கடந்த 12 வருடங்களாக மலேசியாவில் உள்ள ஹொட்டலில் வேலை பார்த்து வந்த ராமச்சந்திரன் நேற்றிரவு அங்கிருந்து திருச்சி திரும்பிய போது, விமானத்தில் வைத்து அவருக்கு இருமல் அதிகமாக இருந்துள்ளது.
அதன்பிறகு அவர் இருக்கையிலேயே சாய்ந்தபடி தூங்கி விட்டார். அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என தெரிகிறது.
ஆனாலும் அவர் இறப்பு குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த ராமச்சந்திரனுக்கு திருச்செல்வி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளார்கள்.