மத்திய பிரதேசத்தில் பிரேத பரிசோதனைக்காக முதியவரைக் கொண்டு சென்றபோது பிழைத்துள்ளார். இதனால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சாகர்:
மத்திய பிரதேசம் மாவட்டத்தின் சாகர் மாவட்டத்தின் அரசு மருத்துவமனையில் காசிராம்(72) எனும் முதியவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கடைசியில் உயிரிழந்ததாக அறிவித்தனர்.
உயிரிழந்ததாக கூறப்பட்ட காசிராமின் உடலை மறுநாள் பிரேத பரிசோதனை செய்ய ஆய்வுக்கூடத்திற்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்துள்ளனர். அங்கு காசிராமின் கால்கள் அசைந்துள்ளன.
இதனை கண்டு அதிர்ந்த மருத்துவமனை பிரேத பரிசோதனை ஆய்வுக்கூட பணியாளர்கள் உடனடியாக மருத்துவர்களுக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்த மருத்துவர்கள் காசிராமை பரிசோதித்து பார்த்து அதிர்ந்தனர்.
அப்போது காசிராம் உயிருடன் இருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து அந்த அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ரோஷன் கூறுகையில், ‘காசிராம் கடந்த 20ம் தேதி இரவு 9.30 மணி அளவில் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அவர் உயிரோடு இருப்பது மறுநாள் தெரிய வந்துள்ளது. பணியில் அலட்சியமாக நடந்துக் கொண்ட மருத்துவர்கள் குறித்தும், அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் விசாரிக்கப்படும்’ என கூறினார்.