தற்கொலைக் குண்டுதாரி சஹ்ரான் காசிம் அக்கரைப்பற்று வந்தது தொடர்பாக, சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு தெரியப்படுத்தியதாக, இலங்கை தவ்ஹீத் ஜமாத் தலைவர் ஏ.கே.ஹாசிம் கூறியிருப்பதை சிறிலங்கா இராணுவம் நிராகரித்துள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக சாட்சியம் அளித்திருந்த இலங்கை தவ்ஹீத் ஜமாத் தலைவர் ஏ.கே.ஹாசிம், தாக்குதல் நடப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்பாக, தேசிய தவ்ஹீத் ஜமாத் தலைவர் சஹ்ரான் காசிம் அக்கரைப்பற்றுக்கு வந்திருந்தார் என்றும், அதுபற்றி தாம் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு தெரியப்படுத்தியதாகவும் கூறியிருந்தார்.
தாம் சஹ்ரான் மற்றும் அவரது குழுவினர் பற்றி இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல்களை அளித்து வந்தேன், சஹ்ரானின் தொலைபேசி இலக்கத்தையும் அவர்களுக்கு அளித்தேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து, கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து, “இந்த சாட்சியத்தை அடுத்து, இராணுவப் புலனாய்வுப் பிரிவிடம், இராணுவத் தலைமையகம் விசாரித்தது.
இலங்கை தவ்ஹீத் ஜமாத் தலைவர் ஏ.கே.ஹாசிம் கூறியது பொய். அவர் கூறிய சாட்சியம் எந்த அடிப்படையும் இல்லாதது” என்று தெரிவித்துள்ளார்.