முஸ்லிம் இளைஞர் ஜார்கண்டில் அடித்துக் கொலை!

“அது ஜுன் மாதம் 17ஆம் நாள் இரவு; என்னுடைய கணவன் ஜம்ஷேபுரில் இருந்து கிராமத்திற்கு திரும்பி வந்துக் கொண்டிருந்தார்.

அப்போது கத்கி டீஹ் கிராமத்தைச் சேர்ந்த சிலர் வந்து, அவரை சுற்றி வளைத்துக் கொண்டார்கள்.

திருட்டுப் பழியை சுமத்தி இரவு முழுவதும் மின்சார கம்பத்தில் கட்டி வைத்து, அடித்து உதைத்திருக்கிறார்கள்.

ஜெய் ஸ்ரீராம் மற்றும் ஜெய் ஸ்ரீ ஹனுமான் என்று சொல்லுமாறு கட்டாயப்படுத்தி இருக்கின்றனர்.

ஆனால் அவர் அப்படி சொல்ல மறுத்ததற்கு மோசமாக அடித்தார்கள். காலையானதும் அவரை சராய்கேலா போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்திருக்கிறார்கள்.

தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எதையுமே எடுக்காத போலீசார், எனது கணவரை திருடன் என்று முத்திரைக் குத்தி சிறைக்கு அனுப்பி விட்டார்கள்.

அவருக்கு உடம்பில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. அதனால்தான் அவர் இறந்து விட்டார்”

ஷாயிஸ்தா பர்வீன் இதைச் சொல்லிக் கொண்டே தலையில் அடித்துக் கொண்டு அழுகிறார்.

திருமணமாகி சில மாதங்கள் மட்டுமே ஆன நிலையில், அவரின் இந்த நிலைமையை பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது.

ஜார்கண்ட் மாநிலத்தின் சராய்கேலா மாவட்டத்தில் உள்ள கதம்டீஹா கிராமத்தை சேர்ந்தவர் தான் தப்பேஜ் அன்ஸாரி.

பிபிசியிடம் பேசிய ஷாயிஸ்தா, “நான் போலீசாரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தேன்.

அவர்கள் அதை பதிவு செய்து, எனக்கு நியாயம் வழங்கியிருக்க வேண்டும். தப்ரேஜுக்கு 24 வயதுதான் ஆகிறது. அவரை கொலை செய்துவிட்டார்கள்.

இந்த விவகாரத்தில் போலீசும், சிறை நிர்வாகமும் அலட்சியமாக இருக்கின்றனர். எங்கள் புகாரை உயர் நிலையில் விசாரிக்க வேண்டும்” என்கிறார் அவர்.

ஊடகங்களிடம் பேசிய சராய்கேலா காவல் நிலைய பொறுப்பாளர் அவினாஷ் குமார், “தாத்கீடீஹ் கிராமத்தை சேர்ந்தவர்கள், தப்ரேஜ் அன்ஸாரி திருடியதாக சொல்லி பிடித்து வந்தார்கள்.

தாத்கீடீஹில் கமல் மொஹ்தா என்பவரின் வீட்டு மாடியில் இருந்து குதித்துச் செல்வதைப் பார்த்து கிராம மக்கள் அவரை பிடித்து வந்தார்கள்.

அவருடன் அப்போது வேறு இரண்டு பேரும் இருந்தார்கள். அவர்கள் தப்பித்து போய்விட்டார்கள்.”

தப்ரேஜை மட்டும் கிராமத்தினர் பிடித்துவிட்டார்கள். பிறகு அவர்கள் எங்களிடம் வந்து ஒப்படைத்து விட்டார்கள்.

இதில் போலீசார் அலட்சியம் காட்டினார்கள் என்று சொல்வதற்கான வாய்ப்பே இல்லை” என்று அவர் சொல்கிறார்.

இங்கு தப்ரேஜின் மரணத்திற்கு பிறகு, அவரது சடலத்தை பிரேத பரிசோதனை செய்வதற்காக, சிறை அதிகாரிகள் சராய்கேலா சதர் மருத்துவமனைக்கு எடுத்து சென்றபோதுதான் பிரச்சனை வெடித்தது. பிறகு, அங்கிருந்து தர்பேஜின் சடலம், ஜம்ஷேத்புருக்கு அனுப்பப்பட்டது.

இதற்கிடையில் தப்ரேஜ் அன்சாரியை அடித்தபோது எடுக்கப்பட்ட இரண்டு வீடியோக்கள் வைரலாகின. அதில் கிராம மக்கள் சேர்ந்து அவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து அடிக்கும் காட்சியும் இடம் பெற்றுள்ளது.

முதலில் அவரிடம் பெயர் கேட்கப்படுகிறது. பிறகு, ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஸ்ரீ ஹனுமான் என்று சொல்லச் சொல்கிறார்கள்.

‘கும்பல் கொலை’ குற்றம்சாட்டப்பட்டவர்களை பாஜக அமைச்சர்கள் அரவணைப்பது ஏன்?
அங்கன்வாடி முதல் அசோக் கொலை வரை – சாதியின் பங்கு என்ன?

இந்த வீடியோவில் சில பெண்களும் இருப்பது தெரிகிறது.

இந்த வீடியோவை பார்த்த சில விவரம் அறிந்தவர்கள், சராய்கேலா கர்சாம்பாவின் காவல்துறை கண்காணிப்பாளரிடம் வீடியோவை கொடுத்தார்கள்.

ஜார்கண்டில் கும்பலால் அடித்து கொலைச் செய்யப்படும் சம்பவங்கள் அவ்வப்போது ஆங்காங்கே வெளியாகும் செய்திதான்.

ஜார்கண்ட் பொதுமக்கள் உரிமை இயக்கத்தின் அறிக்கையின்படி, தற்போதைய பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் குறைந்தது 12 பேர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

அதில் இரண்டு பேர் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள், எஞ்சிய பத்து பேரும் முஸ்லிம்கள்.

பொதுவாக மதரீதியிலான பகைமை அதிகரிக்கும் போதும், குற்றவாளிகள், பாஜக மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அல்லது அவர்களுடைய தோழமை நிறுவனமாக இருக்கும் போதும், இது போன்ற கும்பல் தாக்குதலும், கொலையும் தொடர்கின்றன.

ராம்கட்டில் அலீமுதீன் அன்ஸாரி கும்பலால் அடித்து கொல்லப்பட்ட பிறகு, குற்றவாளிகள் என கூறப்பட்டவர்களுக்கு, உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்தபோது மலர்மாலை போட்டு வரவேற்றவர், நரேந்திர மோதி தலைமையிலான அமைச்சரவை உறுப்பினர்களில் ஒருவர்.

அவர்தான் அப்போதைய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா. இது தொடர்பாக அவரை பலரும் விமர்சித்திருந்தார்கள்.

இதன் பிறகும், பிபிசியிடம் பேசியபோது அவர் சொன்ன மற்றொரு விஷயம் ஆச்சரியமளித்தது.

அது என்ன தெரியுமா? கும்பல் படுகொலை செய்த குற்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கு நடத்துவதற்காக அவர் நிதியுதவியும் செய்திருக்கிறார் என்பது.