தாயை ஏமாற்றிய ‘பாசக்கார’ மகன்..!

தாயிடமிருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்து, அவரை அடித்து துரத்திய மகனிடம் இருந்த நிலத்தை மீட்டு தாயிடம் தமிழகத்தின் உத்தமபாளையம் உதவி ஆட்சியாளர் ஒப்படைத்துள்ளார்.

தமிழகத்தின் தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள உப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் சின்னத்துரை மனைவி முத்துப்பேச்சி (75). இவருக்கு, மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

சில ஆண்டுகளுக்கு முன்பு சின்னத்துரை இறந்துவிட்டார். இதையடுத்து, உப்புக்கோட்டை கிராமத்திலிருந்த 60 சென்ட் நிலத்தை 7 கோடியே 89 இலட்சம் ரூபாய்க்கு விற்று, அந்த பணத்தை பிள்ளைகளுக்கு சம பங்காக பிரித்து வழங்கியுள்ளார் முத்துப்பேச்சி.

இந்நிலையில், அந்த நிலத்தின் பத்திரப் பதிவிற்காக தேனி சார் பதிவாளர் அலுவலகம் சென்றனர். அப்போது, முத்துப்பேச்சியின் பெயரில் இருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள மற்றொரு சொத்தான 45 சென்ட் நிலத்தை, இரண்டாவது மகன் நாகேந்திரன் (45) என்பவர், தாயின் கையெழுத்தை ஏமாற்றி பெற்று, தன் பெயரில் பதிவுசெய்து கொண்டார்.

இந்த விவரம், பின்னர்தான் முத்துப்பேச்சிக்கு தெரிய வந்தது. இதுகுறித்து நாகேந்திரனிடம் அவர் கேட்டபோது, பெற்ற தாய் என்றும் பாராமல் அவரை அடித்து, அவதூறாக பேசி, வீட்டை விட்டு துரத்தி விட்டார். இதையடுத்து முத்துப்பேச்சி, உத்தமபாளையம் உதவி ஆட்சியாளர் அலுவலகத்தில் இயங்கி வரும், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலம் மற்றும் பராமரிப்பு குறை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த உதவி ஆட்சியாளர் வைத்திநாதன், 45 சென்ட் இடத்தின் பத்திரப் பதிவை இரத்து செய்து, நிலத்தின் ஆவணங்களை முத்துப் பேச்சியிடம் வழங்கினார்.

இதுகுறித்து உதவி ஆட்சியாளர் கூறுகையில், ”இந்த வழக்கில், ஏற்கெனவே முத்துப்பேச்சியின் அனுமதியோடு விற்ற சொத்து பதிவுகள் செல்லும். 45 சென்ட் நிலத்தை பதிவு செய்த பத்திரம் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது” என்றார்.