தமிழகத்தில் வியூகத்தை மாற்றி அமைத்த ஸ்டாலின்!

மக்களவைத் தேர்தல் முடிந்த கையோடு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று மக்களவை மற்றும் சட்டமன்ற இடை தேர்தல் பிரசாரத்தில் முழங்கினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். ஆனால் அவர் சொன்னபடி தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை. ஏமாற்றமே மிஞ்சியது. மேலும் நகை கடன் ரத்து, கல்விக்கடன் ரத்து, விவசாயக்கடன் ரத்து என திமுகவால் நிறைவேற்ற முடியாத திட்டங்களை எல்லாம் கூறி வெற்றி பெற்றதனால், தொகுதி பக்கம் செல்ல முடியாத நிலையில் திமுக பிரமுகர்கள் இருக்கிறார்கள்.

இந்நிலையில் மீண்டும் ஆட்சி மாற்றம் குறித்து பேசியுள்ளார் ஸ்டாலின். தேர்தல் வராமலேயே தமிழகத்தில் ஆட்சிமாற்றம் வரும் என நேற்று சென்னையில் மீண்டும் பேசியிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

இந்தப் பேச்சின் உண்மையான பின்னணி என்ன? என விசாரிக்கும் போது, ஒற்றைத் தலைமை, இரட்டைத் தலைமையை முன்வைத்து அதிமுகவுக்குள் எழுந்திருக்கும் அதிருப்தியைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஸ்டாலின் நினைப்பதாக கூறுகிறார்கள் நெருங்கிய வட்டாரங்கள்.

ஆனால் அதிமுகவில் ஓபிஎஸ் இபிஎஸ் பிரிந்து நேருக்கு நேர் நின்ற போது கூட ஆட்சி மாற்றம் உண்டாகவில்லை. இப்போது மனக்கசப்புகள் இருந்தாலும் ஆட்சியை விடும் மனநிலையில் அதிமுகவினர் இல்லை என்பது தான் உண்மையான கள நிலவரமாக உள்ளது.

அதனால் ஸ்டாலின் பேசியதன் உண்மையான அர்த்தம் தான் என்ன என்று கேட்டால்? ஆட்சி மாற்றம் வருமென்று நம்பியிருந்த தொண்டர்களையும், இரண்டாம் கட்டத் தலைவர்களையும் சமாளிக்க ஸ்டாலின் உண்டாக்கிய புதிய வெறுமையான பரபரப்பு செய்தி என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தினர். மேலும் ஆட்சி கனவில் கையில் இருந்ததையெல்லாம் கரைத்துவிட்டதால் திமுக பிரமுகர்கள் விரக்தியில் தான் இருக்கிறார்களாம்..

இதெல்லாம் தாண்டி அதற்கான காரணமே வேறு என்கிறார்கள் விவரம், அறிந்தவர்கள். சபாநாயகரை நீக்குவதைவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நீக்குவதே முக்கியம் என்று சொல்லி தனது நிலைப்பாட்டை ஸ்டாலின் மாற்றி பேசியுள்ளார். சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வலியுறுத்தாமல் விடுவதற்கே இந்த சமாளிப்பு வார்த்தைகள் என்பதே உண்மையான கரணம் என்கிறார்கள்.. ஏனெனில் எப்படியும் தோல்வியே மிஞ்சும் என்பதால் இந்த நிலைப்பாடாம்…

ஆக திமுகவினர் எதிர்பார்த்த எதுவுமே நடக்க போவதில்லை என்பதை ஸ்டாலின் சூசகமாக தெரிவித்துள்ளார். இப்போ ஆட்சி மாறும், விரைவில் மாறும் என காலத்தை கடத்திவிடலாம், நிர்வாகிகளையும் சமாளித்து விடலாம் என ஸ்டாலின் கணக்கு போட்டுள்ளாராம்..

ஸ்டாலினின் வியூகத்தையும், கணக்குகளையும் திமுகவினர் எப்படி பார்க்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரிந்த ஒன்று..