விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பியுமான தொல்.திருமாவளவன் தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை உடனடியாக கர்நாடக அரசு திறந்து விட வேண்டும், இல்லாவிட்டால் தமிழகத்தில் மிகப் பெரிய கிளர்ச்சி ஏற்படும் என சுட்டிக்காட்டுகிறோம் என கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி மேலாண்மை ஆணையம் ஒருபுறம் உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டே இன்னொரு புறம் அதை நடைமுறைப்படுத்த மறுக்கும் கர்நாடக அரசுக்குத் துணை போகிறது. இது அப்பட்டமான துரோகம். இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
டெல்லியில் இன்று நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான காவிரி நீரை தமிழகத்திற்கு அளிக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் கொடுக்கப்பட வேண்டிய தண்ணீரையே இதுவரை கர்நாடக அரசு கொடுக்கவில்லை .
இந்நிலையில் ஜூலை மாதத்திற்கான தண்ணீரைத் திறந்து விடுவார்கள் என்பதற்கு எந்தவொரு உத்தரவாதமும் இல்லை. இந்நிலையில் கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து இல்லை, மழை பெய்தால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று குறிப்பிட்டுள்ளார். இது மறைமுகமாக கர்நாடகாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக உள்ளது.
மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை மதிக்காத கர்நாடக அரசுக்குக் கண்டனம் எதுவும் தெரிவிக்காத மேலாண்மை ஆணையம் அவர்களுக்குப் பரிந்து பேசுவதாகவும், தமிழகத்துக்கு எதிராக கர்நாடக அரசின் நிலையை நியாயப்படுத்துவதாகவும் கருத்து தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
“இனிவரும் காலங்களில் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை அதன் தலைமையிடமான பெங்களூரிலேயே கூட்டலாம்” என்று தமிழக அரசு கருத்து தெரிவித்திருப்பது தமிழக நலனுக்கு எதிரானதாக உள்ளது. பெங்களூருவில் கூட்டம் நடத்தப்பட்டால் அது கர்நாடகாவுக்கே சாதகமாக அமையும்.
எனவே கர்நாடகா அல்லாத ஒரு இடத்தில் கூட்டத்தை நடத்துவதே முறையாக இருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை உடனடியாக கர்நாடக அரசு திறந்து விட வேண்டும், இல்லாவிட்டால் தமிழகத்தில் மிகப் பெரிய கிளர்ச்சி ஏற்படும் என சுட்டிக்காட்டுகிறோம்”, என அவர் தெரிவித்துள்ளார்.