இலங்கையர் செய்த மோசமான செயல்…

இலங்கையைச் சேர்ந்த நபர் சுமார் 1 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை கடத்த முயன்றதால், உடனடியாக அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 7.30 மணிக்கு துபாய் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது.

இந்த விமானத்தில் செல்லவிருந்த பயணிகள் அனைவருக்கும் சோதனை முடிந்ததால், அவர்கள் அனவரும் விமானத்திற்குள் அமர்ந்திருந்தனர்.

விமானமும் புறப்பட தயாராக இருந்தது. அப்போது திடீரென்று சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அதில், விமானத்தில் மிகப்பெரிய அளவிலான ஹவலா பணம் வெளிநாட்டுக்கு கடத்தப்படுகிறது. பயணி ஒருவர் சோதனையில் இருந்து தப்பி ஹவாலா பணத்துடன் விமானத்தில் ஏறி அமர்ந்து விட்டர், என்ற தகவல் கிடைத்தது.

இதனால் சுங்க அதிகாரிகள் அவசர அவசரமாக விமானத்தில் ஏறி சந்தேகத்திற்கிடமான கைப்பைகளை சோதனையிட்ட போது, இலங்கையை சேர்ந்த முகமது சபீர் (28) என்பவர் கைப்பையை திறந்து பார்த்துள்ளனர்.

அதில், கருப்பு கவரில் சுற்றப்பட்ட பெரிய பார்சல் இருந்தது. அதை அதிகாரிகள் பிரித்துப் பார்த்தபோது சுமார் 1 கோடி மதிப்புள்ள யூரோ, குவைத், தினார் உள்ளிட வெளிநாட்டு பணம் இருந்துள்ளது.

இதையடுத்து உடனடியாக விமானத்தில் இருந்து இறக்கப்பட்ட அவரிடம் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், இலங்கையை சேர்ந்த நான், நேற்று காலை 3.30 மணிக்கு கொழும்புவில் இருந்து சென்னை வந்த லங்கன் விமானத்தில் சென்னை வந்தேன்.

பின்னர், இங்கிருந்து மற்றொரு விமானத்தில் துபாய்க்கு புறப்பட்டேன். அப்போது, அனைத்து சோதனைகளையும் முடித்து விட்டு விமானத்தில் ஏறுவதற்கு ஏரோ பிரிட்ஜில் நடந்து வந்தபோது, ஒரு ஆசாமி, என்னிடம் ஒரு பார்சலை கொடுத்து, நீ துபாயில் இறங்கியதும் அங்கு ஒருவர் இந்த பார்சலை வாங்கிக்கொண்டு 1 லட்சம் தருவார், என கூறினார்.

பணத்திற்கு ஆசைப்பட்டு அதை வாங்கி வந்தேன் என்று கூறியுள்ளார். இது அதிகாரிகளுக்கு மேலும் சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது.

ஏனெனில் ஏரோ பிரிட்ஜ் பகுதிக்குள் பயணிகளோ அல்லது வெளிஆட்களோ வர முடியாது. இந்த பார்சலை விமான நிலைய ஊழியரோ, விமான நிலையத்தில் பணியாற்றுபவரோ அல்லது சுங்கத்துறை அதிகாரியோ அல்லது ஊழியராகத்தான் கொடுத்து இருக்க வேண்டும் என தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்டது ஹவாலா பணமா என்று கேட்டபோது இலங்கை பயணிக்கு எந்த விவரமும் தெரியவில்லை.

இந்த பணத்தை துபாய் வழியாக வெளிநாட்டிற்கு கடத்தும் அந்த ஆசாமி யார் என்று தீவிர விசாரணை நடக்கிறது.

சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் ஒரு பயணியிடமிருந்து 1 கோடி மதிப்புடைய ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டில் இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.