தமிழகத்தில் இரண்டரை வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக குழந்தையின் தாய் மாமா கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை விளாங்குறிச்சியில் ஜேசிபி இயந்திரங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருபவர் கனகராஜ் (38). இவர் மனைவி காஞ்சனா (21) தனது இரண்டரை வயது மகள் அரும்பதாவுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதே பகுதியிலுள்ள உள்ள தனது தாய் பேச்சியம்மாள் வீட்டுக்கு சென்றார்.
அந்த வீட்டில் தந்தை குப்புசாமி, தங்கை மகன் பூபதி (26), குப்புசாமியின் முதல் மனைவியின் மகள் கற்பக விஷ்ணு (28), மகன் ரகுநாதன் (26) ஆகியோர் இருந்தனர்.
அன்று இரவு காஞ்சனா அருகில் படுத்திருந்த அரும்பதா திங்கட்கிழமை அதிகாலை பார்த்தபோது மாயமாகி இருந்தாள்.
பொலிசாரின் தேடுதலில் வீட்டின் எதிரே கருவேலங்காட்டில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து அரும்பதாவின் சடலம் மீட்கப்பட்டது. பொலிசாரின் தீவிர விசாரணையில் குழந்தையைக் கொன்றது மாமன் ரகுநாதன் என்பது தெரியவந்தது.
ஞாயிற்றுக்கிழமை இரவு போதையில் இருந்த ரகுநாதன், குழந்தையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளான். அப்போது குழந்தை வீறிட்டு அழவே, எதிரேயுள்ள கருவேலங்காட்டுப் பகுதிக்குத் தூக்கிச் சென்றுள்ளான்.
கருவேலங்காட்டில் வைத்து மீண்டும் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது, குழந்தை அழுகையை நிறுத்தாமல் போகவே வெளியில் தெரிந்துவிடுமோ என்ற அச்சத்தில் இரக்கமே இல்லாமல் கிணற்றுக்குள் வீசியுள்ளான் ரகுநாதன்.
பொலிசாரின் விசாரணையில் இந்த உண்மையை ஒப்புக்கொண்டதை அடுத்து ரகுநாதன் கைது செய்யப்பட்டான்.
இதனிடையில் சிறுமி இறந்த தகவல் கிடைத்ததும் பத்திரிகையாளர்கள் சம்பவம் நடந்த பகுதிக்கு சென்று பேட்டி எடுத்தனர்.
அப்போது ரகுநாதன் சோகத்துடன், எனது தங்கைக்கும், மச்சானுக்கும் எந்த விரோதிகளும் இல்லை. குழந்தையை யார் கொலை செய்தார்கள் என்பது எங்களுக்கு தெரியாது என பேட்டி அளித்தார்.
ஆனால் பின்னர் பொலிசார் விசாரணையில் அவர் தான் குற்றவாளி என தெரியவந்துள்ளது.