திருமணமான அன்றே தாலியை கழற்றி வீசிய இளம் பெண்…

தமிழகத்தில் கட்டாய தாலியை அறுத்து எரிந்துவிட்டு இளம் பெண் ஒருவர் காதலனுடன் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம், கொடையம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம்-பூங்காவனம். இவர்களது மகன் குமார் என்பவரும், அதே ஊரைச் சேர்ந்த ஈஸ்வரி என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்த காதல் விவகாரம் ஈஸ்வரியின் பெற்றோருக்கு தெரியவந்ததால், கடந்த 6-ஆம் திகதி அவசர அவசரமாக வேறு ஒருவருடன் ஈஸ்வரிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர் .

கட்டாய திருமணத்தை எதிர்த்து அன்றே வீட்டிலிருந்து வெளியேறிய ஈஸ்வரி, கட்டாய தாலியை அறுத்து எரிந்துவிட்டு காதலன் குமாரை ஆரணியில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்து கொண்டு சென்னையில் குடியேறினார்.

இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட தகவல் அறிந்த, பெண் வீட்டார் மற்றும் கொடையம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சிலர், குமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

மணமகனின் குடும்பத்தாரை ஊருக்குள் அனுமதிக்க மறுத்து, ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகவும், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளதாகவும் கிராமத்தினர் மீது குமாரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தங்கள் உயிருக்கும், உடமைக்கும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு கொடையம்பாக்கம் கிராமத்தினரே காரணம் என குமாரின் தாய் மற்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஊருக்குள் செல்ல கிராமத்தினர் விதித்துள்ள தடையை நீக்கக்கோரியும், மணமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கக் கோரியும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மணமக்கள் புகார் அளித்துள்ளனர்.