இந்திய மாநிலம் கேரளாவில் பேஸ்புக் மூலம் அறிமுகமான பெண்ணால் தொழிலதிபருக்கு ரூ.50 லட்சம் பறிபோன சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கேரள மாநிலம் இரிங்காலக்குடா பகுதியை சேர்ந்தவர் அந்த 40 வயது மதிக்கத்தக்க தொழிலதிபர். பெரும்பாலும் வெளிநாடுகளில் தொழில் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் ஒருநாள் அவரது பேஸ்புக் மெசஞ்சரில் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அந்த குறுந்தகவலை அனுப்பியவர் அழகான பெண் என்பதை அறிந்த அவர், அந்த குறுஞ்செய்திக்கு பதில் அளித்துள்ளார்.
மருத்துவர் என அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த யுவதியுடன் தொழிலதிபரின் நட்பு அடுத்த 6 மாதங்களில் மிக நெருக்கமாக வளர்ந்தது.
இதனிடையே பலமுறை நேரலை அழைப்புக்கும், தொலைபேசி அழைப்புக்கும் முயன்ற தொழிலதிபருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
பகல் வேளையில் தாம் மருத்துவமனையில் பரபரப்பாக இயங்குவதாகவும், இரவில் கணவர் அருகாமையில் இருப்பதாகவும் கூறி அழைப்புகளுக்கு அந்த யுவதி மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஆனால் பேஸ்புக் அரட்டைகளுக்கு எப்போதும் பதில் அளித்தும் வந்துள்ளார். 6 மாத காலத்தில் இருவரும் மிகவும் நெருக்கமாக பழகியுள்ளனர்.
மட்டுமின்றி இருவரும் தங்களின் புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளனர். இதனிடையே கோவையில் தாம் தங்கியிருப்பதாகவும், சந்திக்கலாம் எனவும் அழைத்துள்ளார்.
தகவல் கிடைத்ததும் வெலிநாட்டில் இருந்த தொழிலதிபர் உடனடியாக இந்தியா திரும்பியுள்ளார். மட்டுமின்றி, மனைவியிடம் ஆயுர்வேத மருத்துவரை காண செல்வதாக கூறி, தமது புதிய காரில் கோவை சென்றுள்ளார்.
கோவையில் சென்ற பின்னரும், அந்த பேஸ்புக் காதலி தொலைபேசியில் பேச மறுத்துள்ளதுடன், காரின் வண்ணமும் எண்ணும் கேட்டறிந்துள்ளார்.
இந்த நிலையில் திடீரென்று தொழிலதிபரை அணுகிய குழு ஒன்று தாங்கள் தேசிய பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் எனவும்,
தங்களுக்கு அந்த பெண்ணின் மொத்த தகவலும் வேண்டும் எனவும், அவர் மருத்துவர் அல்ல எனவும், சர்வதேச போதை மருந்து கடத்தல் கும்பலில் முக்கிய நபர் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலால் அதிர்ந்து போன, தொழிலதிபர், அந்த அதிகாரிகளிடம் உதவ முடியுமா என விசாரித்துள்ளார்.
ஒரு கோடி ரூபாய் செலவு செய்தால் வழக்கில் இருந்து விடுவிக்கலாம் என அந்த அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
இறுதியில் 50 லட்சம் அளிக்க அவர் ஒப்புக்கொண்டுள்ளார். மட்டுமின்றி உறவினர்களை அழைத்து பணத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
அடுத்த சில மணி நேரங்களில் பணத்தை அந்த அதிகாரிகளிடம் அளித்துள்ளார் தொழிலதிபர். இதனையடுத்து அந்த கும்பல் இவரை விடுவித்துள்ளது.
ஆனால் இச்சம்பவம் தொடர்பில் விசாரித்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த கும்பல் தம்மை ஏமாற்றியதாகவும்,
பேஸ்புக்கில் தம்மிடம் 6 மாத காலம் அரட்டையில் ஈடுபட்டவர் பெண் இல்லை எனவும், அது ஒரு 24 வயது இளைஞர் எனவும் பொலிசாரின் விசாரணையில் தெரியவந்தது.
மட்டுமின்றி தொழிலதிபர் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் அந்த கும்பலில் முக்கிய நபரை கைது செய்துள்ளனர்.