குளிர்சாதனப் பெட்டி வெடித்ததில் 3 பேர் பலி!

இந்தியாவில் குளிர்சாதனப் பெட்டியொன்று வெடித்து தீ பற்றியதில், மூன்று பேர் உயிரிழந்துள்ள சோகசம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சென்னை தாம்பரம், சேலையூரை அடுத்த திருமங்கை மன்னன் தெருவை சேர்ந்த பிரசன்னா (32). பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளர், இவரது மனைவி அர்ச்சனா (30)  தனியார் பாடசாலையில் ஆசிரியர்,பிரசன்னாவின் தாய் ரேவதி (59) ஆகியோரே சம்பவத்தில் பலியானார்கள்.

இந்நிலையில் மூவரும் வழக்கமான பணி முடிந்து இரவு படுக்கைக்கு சென்றுள்ளனர். நள்ளிரவில் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தபோது உயர் மின் அழுத்தம் காரணமாக  குளிர்சாதன பெட்டி  திடீரென வெடித்து தீப்பற்றியுள்ளது.

தீ மற்ற பகுதிகளுக்கும் பரவி பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் எரிந்துள்ளது. இதில் மின்சாரம் தடைப்பட்டு அறை முழுவதும் புகை மூட்டமாகியுள்ளது. இதனால் உறக்கத்திலிருந்தவர்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு  வெளியேற முடியாமல் உயிரிழந்துள்ளார்கள்.

மூவரும் உயிரிழந்த சம்பவம் அக்கம்பக்கத்தில் யாருக்கும் தெரியாத நிலையில் காலையில் வீட்டு வேலை செய்யும் பெண் வழக்கம்போல் வந்துள்ளார். வெகு நேரமாகியும் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த அவர் ஜன்னல் வழியாக பார்த்தபோது வீட்டினுள் இருந்து புகை வந்தது. அதைக் கண்டு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே புகுந்து பார்த்துள்ளார்.

உள்ளே இறந்த நிலையில் மூன்று பேரும் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கும் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சாதாரண குளிர்சாதனப் பெட்டி விபத்தில் கணவன், மனைவி, மாமியார் மூவரும் உயிரிழந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணகைளின் பின்னரே உயிரிழந்தமைக்கான காரணம் தெரியவரும் என பொலிஸார் கூறியுள்ளனர்.