மண்டபத்திற்கு வெளியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்: பொலிஸ் பாதுகாப்புடன் தமிழ் அரசு கட்சி தேசிய மாநாடு!
யாழ் வீரசிங்கம் மண்டபத்தின் முன்பாக இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உணர்வுபூர்வமாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் 16வது தேசிய மாநாடு நடந்து கொண்டிருந்தபோது, வீரசிங்கம் மண்டபத்திற்கு எதிரில் காணாமல் போனாவர்களின் உறவினர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவளிப்பதன் மூலம், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தை அரங்கிலிருந்து அகற்றிவிட்டது தமிழ் தேசிய கூட்டமைப்பு என குற்றம்சுமத்தி இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
பிள்ளைகளை பறிகொடுத்த தாய்மார் வீரசிங்கம் மண்டபத்தை நோக்கி வர, விசேட பொலிஸ் அணி களமிறக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்கள் மண்டபத்திற்கு அருகில் நுழைய முடியாதவாறு பாதுகாப்பு அரண் அமைத்து, தமிழ் அரசு கட்சியின் மாநாட்டிற்கு பொலிசார் உயர் பாதுகாப்பு வழங்கினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் மயங்கி வீழ்ந்தமை அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
வெயில் மற்றும் உடல் சோர்வு காரணமாக மயங்கி வீழந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீண்ட நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மிகவும் சோர்வுற்ற நிலையில் உள்ளமை குறிப்பிடத் தக்கது.
பெறுமதியான இவ் ஆர்ப்பாட்டம் ஈ.பி.ஆர்.எல்.எப் பாராளுமன்ற உறுப்பினரால் ஒழுங்கு படுத்தப்பட்டதாக போராட்ட இடத்தில் ஒருவர் கூறுவதும் குறிப்பிடத் தக்கது.