வாட்ஸ் அப் சேட்டால் பறிபோன வேலை!

சுவிட்சர்லாந்தில் ஊழியர்களின் வாட்ஸ் அப் சேட் தகவலை காரணம் காட்டி வேலையைவிட்டு நீக்குவது சட்டவிரோதம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சூரிச் நகரில் அமைந்துள்ள நிறுவனம் ஒன்றில் செயலராக பணியாற்றி வந்துள்ளார் இளம்பெண் ஒருவர்.

அவர் பணியாற்றிய நிறுவனமானது அலுவல் தொடர்பான அழைப்புகளுக்காக இவருக்கு மொபைல் போன் ஒன்றை வழங்கியுள்ளது.

இந்த மொபைலை பயன்படுத்தி, தமது மேலாளர் மற்றும் சக ஊழியர்கள் தொடர்பில் தோழி ஒருவரிடம் அவதூறு பேசியதாக கூறப்படுகிறது.

பாதுகாப்பு காரணங்களுக்காக ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட மொபைலை சோதனையிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ள நிறுவனம்,

குறித்த இளம்பெண்ணின் மொபைலில் இருந்த வாட்ஸ் அப் தகவல்களை வாசித்துள்ளது. 2017 ஜூன் மாதம், இந்த விவகாரம் தொடர்பில் நடவடிக்கை மேற்கொண்ட நிர்வாகம், எந்த முன்னெச்சரிக்கையும் இன்றி அவரை வேலையைவிட்டு நீக்கியுள்ளது.

நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை மீது உடன்படாத இளம்பெண் தொழிலாளர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். தமக்கு அந்த வேலையை திரும்ப பெற்றுத்தருவதுடன், அதுவரையான ஊதியம் உள்ளிட்ட அனைத்து பலன்களையும் பெற்றுத்தரவும் கோரிக்கை வைத்தார்.

இந்த வழக்கு தொடர்பில் விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம், நிறுவனம் வழங்கிய மொபைல் போன் என்றாலும்,

ஊழியர்களின் தனிப்பட்ட சேட் விவகாரங்களை வேவு பார்ப்பது என்பது சட்ட விரோதம் என 2018 ஆகஸ்டு மாதம் தீர்ப்பு வழங்கியது.

மட்டுமின்றி அதுவரையான ஊதியம் மற்றும் அனைத்து பலன்களையும் வருக்கு வழங்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியது.

இதனையடுத்து அவருக்கு 22,887 பிராங்குகள் வழங்க நீதிமன்றம் தீர்ப்பானது. தொழிலாளர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்றது அந்த நிறுவனம்.

மேலும், நீதிமன்றம் இந்த விவகாரத்தில் அவருக்கு சாதமாக தீர்ப்பு வழங்குவது, அவரது துர்நடத்தையை ஆதரிப்பதாக அமையும் என வாதிட்டது.

இருப்பினும், தொழிலாளர் நல நீதிமன்றம் அளித்த தீர்ப்பையை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது.

எந்த நிறுவனமும் தொழிலாளர்களின் உரிமையை பறிக்கும் செயல்களில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சுட்டிக்காட்டியது.

மட்டுமின்றி அவருக்கான இழப்பீடு தொகையாக 25,187 பிராங்குகள் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளது.