திருடிய பார்சலை திருப்பிக் கொடுத்த திருடர்கள்!

தாங்கள் திருடிய பொருள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு சிறுவனுக்கு வந்த பரிசு என்பதை அறிந்து கொண்ட திருடர்கள், அதை திரும்பக் கொண்டு வைத்ததுடன், கூடவே ஒரு மன்னிப்புக் கடிதமும் எழுதி வைத்த நெகிழ்ச்சி சம்பவம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது.

மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டிஸம் குழந்தையான Vick, ஒரு மல்யுத்தப் பிரியன்.

அவனது பிறந்த நாளுக்கு ஒரு மல்யுத்த பெல்ட் ஒன்றை பரிசாக அளிக்க முடிவு செய்திருந்தனர் அவனது பெற்றோர்.

ஒன்லைனில் ஆர்டர் செய்யப்பட்டிருந்த அந்த பரிசுப் பொருள் அவனது வீட்டில் டெலிவரி செய்யப்பட்டிருந்த நிலையில், இரண்டு பெண்கள் அதை திருடிச் சென்று விட்டனர்.

இரண்டு பெண்கள் அந்த பார்சலை திருடிச் செல்லும் காட்சிகள் அந்த வீட்டிலிருந்த கெமராவில் பதிவாகியிருந்தது.

பொலிசார் அந்த காட்சியை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்திருந்தனர்.

ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த பார்சல் மீண்டும் வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்ததை Vickஇன் பெற்றோர் கண்டனர். கூடவே நான்கு பக்கங்கள் எழுதப்பட்ட ஒரு மன்னிப்புக் கடிதமும் அந்த பார்சலுடன் இருந்தது.

அந்த கடிதத்தில், உங்கள் பொருளை திருடியதற்காக வருந்துகிறோம். உடல் நலமற்ற ஒரு ஐந்து வயது குழந்தையின் பொருளை திருடும் நிலை எனக்கு வரும் என்று கனவிலும் நான் நினைத்ததில்லை.

எனக்கும் ஆறு வயதில் ஒரு குழந்தை உண்டு. என்ன செய்வது, வீடில்லாமல் தெருவில் வசிக்கும் எங்களுக்கு எப்படியாவது இரண்டு டொலர் கிடைத்து விடாதா என்ற நப்பாசைதான்.

நான் செய்ததைக் குறித்து வெட்கம் அடைகிறேன், என்று அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.

தாயும் மகளுமாகிய அந்த இரண்டு பெண்கள் மீதும் எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படாத நிலையில், Vickஇன் பெற்றோர் மீண்டும் அந்த பரிசை மகனுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர், இம்முறை, கையெழுத்து போட்டால்தான் பொருள் டெலிவரி செய்யும் விதத்தில்!