அமெரிக்க எல்லையில் மரணமடைந்த அகதிகளின் சடலத்துடன் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பையும் இணைத்து கேலிச்சித்திரம் வரைந்த கனேடிய கலைஞரை வேலையில் இருந்து நீக்கியுள்ளனர்.
கனடாவைச் சேர்ந்த கேலிச்சித்திர கலைஞர் michael de addar, சமீபத்தில் உலக அளவில் பலரது கவனத்தையும் ஈர்த்த அகதிகள் மரணம் தொடர்பில் கேலிச்சித்திரம் ஒன்று வெளியிட்டிருந்தார்.
அதில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை கடுமையாக சாடியிருந்தார். கோல்ப் மைதானத்தில் இருக்கும் டிரம்ப், ஆற்றில் மூழ்கி மரணமடைந்த அகதியான ஆஸ்கர் அல்பெர்டோ மற்றும் அவரின் மகளின் சடலத்தைப் பார்த்து, “நான் விளையாடுவதைப் பார்த்து நீங்கள் கவலைப்படுகிறீர்களா?” என்று கேட்பதுபோல் வரைந்திருந்தார்.
இந்த கேலிச்சித்திரமானது உலகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவர் பணிபுரிந்த நிறுவனம் அவரைப் பணியிலிருந்து நீக்கியுள்ளது.
இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள Michael de addar `திடீரென வேலையை இழப்பது அவ்வளவு முக்கியமானதாகத் தெரியவில்லை.
நான் கேலிச்சித்திரங்களின் வாயிலாக சண்டையில் இறங்கினேன். நான் எனது கடைமையைச் செய்கிறேன். எனது கேலிச்சித்திரங்களுக்காகப் போராடுகிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.
எல் சால்வடார் நாட்டை சேர்ந்த ஆஸ்கர் அல்பெர்டோ என்ற இளைஞரும் அவரது மகளும் ஆற்றங்கரையில் இறந்து கரைஒதுங்கிய புகைப்படம் ஒன்று கடந்த வாரம் உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
அந்தப் புகைப்படத்தை பதிவு செய்தது ஜூலியா லி டக் என்ற பத்திரிகையாளர். அமெரிக்காவில் குடியேற எல் சால்வடார் நாட்டவரான ஆஸ்கர் அல்பெர்டோ கோரியுள்ளார். அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
எல் சால்வடாரில் இருந்து மெக்ஸிக்கோவுக்கு சென்றவர் சர்வதேச எல்லையில் காத்திருந்தார். அனுமதி மறுக்கப்பட்டதால் அங்கு பாயும் கிராண்ட் ஆற்றைத் தன் மனைவி மற்றும் மகளுடன் கடந்துவிடலாம் என முடிவு செய்துள்ளார்.
ஆற்றில் சீறிப்பாய்ந்த தண்ணீர் இவரது முயற்சிக்குத் தடையாக இருந்தது. ஆற்று நீரில் ஆஸ்கர் அல்பெர்டோ சிக்கியதைக் கண்டதும் அவரின் மனைவி தனது முயற்சியைக் கைவிட்டுவிட்டு கரைக்குத் திரும்பிவிட்டார். ஆனால், ஆஸ்கர் அல்பெர்டோவும் அவரின் மகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தப் புகைப்படம் உலக அளவில் பலரது கவனதையும் ஈர்த்தது. அமெரிக்காவுக்குத் தஞ்சமடையும் அகதிகள் எவ்வளவு துயரங்களை எதிர்கொள்கிறார்கள் என்று உலகளவில் பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.