சுவிட்சர்லாந்தின் Lausanne பகுதியில் குடியிருக்கும் இளம்பெண் ஒருவர், தமது இந்த நிலைக்கு காரணம் தாயாரால் 5 முறை துப்பாக்கியால் சுடப்பட்டதே என தெரிவித்துள்ளார்.
சொந்த தாயாரே தம்மை துப்பாக்கியால் சுட்டதன் காரணம் குறித்து இதுவரை தமக்கு தெரியாது என கூறும் 29 வயதான பாட்ரிசியா மோரி, ஆனால் தமது தாயார் அன்று தற்கொலை செய்துகொள்ள முயன்றிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் திகதி துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் குற்றுயிராக மீட்கப்பட்டார்.
5 முறை சுடப்பட்டதில் ஒரே ஒரு குண்டு மட்டும் அவரது வாழ்க்கையை தலை கீழாக புரட்டிப்போட்டது. அச்சம்பவத்திற்கு பின்னர் மோரி இதுநாள் வரை சக்கர நாற்காலியிலேயே காலம் தள்ளுகிறார்.
பல முறை தமது தாயார் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறும் மோரி, ஆனால் அன்று அவர் அதை செயல்படுத்தினார் என்றார்.
மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இரண்டுமுறை சுயநினைவை இழந்ததாக கூறும் மோரி ஒருமுறை மரணத்தின் வாயில் வரை சென்று திரும்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது மாரடைப்பு ஏற்பட்டபோது மருத்துவர் தமது நெஞ்சைப் பிளந்து, உள்ளே சிக்கியிருந்த தோட்டா ஒன்றை வெளியே எடுக்க முயற்சி மேற்கொண்டிருந்தார்.
தொடர்ந்து 3 நாட்கள் கோமா நிலையில் வைக்கப்பட்டார் மோரி. பூரண குணமடையாத நிலையில் 6 மாத காலம் கீழங்கவாதம் தொடர்பான சிகிச்சையில் இருந்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் நுரையீரல் பகுதியில் சிக்கியிருந்த தோட்டா ஒன்றை மருத்துவர்கள் அப்புறப்படுத்தியுள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணை தற்போது முடிவடைந்த நிலையில், மோரியின் 63 வயது தாயாருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சக்கர நாற்காலியில் இருக்கும் இந்த நிலையில் தமது தாயார் ஒருமுறை கூட தம்மை சந்திக்கவில்லை என கூறும் மோரி,
தாயாருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையானது மிக அதிகம் எனவும், அவரது உடல் நிலையை கருத்தில் கொள்ளாதது வருத்தமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தண்டனை காலம் முடிந்த பின்னர் அவரை தாம் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக கூறும் மோரி, இனிமேல் ஒரு தாய் மகள் உறவு தங்களுக்குள் இருக்குமா என தெரியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், ஒரு நல்ல வாழ்க்கையை இருவரும் எதிர்நோக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாகவும், அதற்கான நிதி திரட்டும் பணியில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் மோரி தெரிவித்துள்ளார்.