தமிழகத்தில் நடத்தையில் சந்தேகப்பட்டு பெண்ணை அரிவாள் மனையால் கழுத்தை அறுத்து படுகொலை செய்த நபரை பொலிசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் 45 வயதுமிக்க பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பது குறித்து சனிக்கிழமை காலை பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து பெண்ணின் உடலை மீட்ட பொலிசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பான விசாரணையில், இறந்தவர் பெயர் முனியம்மாள் (48) என்பது தெரியவந்தது.
இவரது கணவர் சாமிநாதன் என்பதும், இவருக்கு 3 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்த முனியம்மாள், கட்டட தொழிலாளியான செந்தில்குமாருடன் (37) என்பவருடன் தனியே வாழ்ந்து வந்தாராம். இதனிடையே முனியம்மாளும், செந்தில்குமாரும் ஒன்றாக மது அருந்திவிட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர் எனத் தெரிகிறது.
இந்த நிலையில் முனியம்மாள் வேறு ஒரு ஆண் நபருடன் பழகி வந்தார் எனக் கூறப்படுகிறது. இதனிடையே வெள்ளிக்கிழமை இரவு இருவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார், முனியம்மாளை கழுத்து அறுத்து கொலை செய்தாராம். பின்னர் அவரது உடலை ரயில் தண்டவாளத்தில் வீசி விட்டு தலைமறைவானது தெரியவந்தது.
இதன் பின்னர் அந்த வழியாக சென்றவர்கள் ரெயில் தண்டவாளத்தில் முனியம்மாள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு பொலிசுக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான செந்தில்குமாரை வலைவீசி தேடி வருகிறார்கள்.