பயங்கரவாதி சஹரான் ஹாசீம் மறுபிறவி எடுத்துள்ளதாக வதந்திகளை பரப்பிய குற்றச்சாட்டில் 18 பேரை தேடிவருவதாக பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.
இனவாதத்தையும் இன முரண்பாட்டையும் தோற்றுவிக்கும் நோக்கிலும் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அவதூறு ஏற்படுத்தும் விதத்திலும் நடக்காத ஒரு சம்பவத்தை நடந்ததாகக் கூறி போலிச்செய்தியை வெளியிட்டதாக வைத்தியசாலை நிருவாகம் முறைப்பாடு செய்துள்ளது.
குறித்த முறைப்பாடு எழுத்து மூலமாக கல்முனை பொலிஸ் நிலையத்திலும் சி.ஐ.டி.யினரிடமும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கும் தாதியஉத்தியோகத்தர்கள் சங்கத்துக்கும் முறையிடப்பட்டுள்ளது.
அதேவேளை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு அறிவிப்போம் என நிருவாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
கல்முனை ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் பெண்ணொருவருக்கு குழந்தை பிறந்ததாகவும் அக்குழந்தை சஹ்ரான் போலிருப்பதாக தாதிய உத்தியோகத்தர் சொன்னதாகவும் , இதனையறிந்து வைத்தியசாலை நிருவாகம் குறித்த தாதிய உத்தியோகத்தரை வேலையிலிருந்து தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாகவும் இணையத்த ளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் வெளிவந்தன.
இந்தப் போலிச்செய்தியை வெளியிட்ட தாக , சுமார் 18 பேரின் பெயர்கள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய போலி இணைய சமூக வலைத்தள முறைப்பாட்டுப் பிரிவுக்கும் முறையிடவுள்ளதாகவும் வைத்தியசாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.