அமெரிக்காவில் தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக், சக்தி வாய்ந்த சரின் என்ற விஷ வாயு வெளிப்பாடு காரணமாக நான்கு கட்டிடங்களை காலி செய்துள்ளது.
கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ, சிலிக்கான் வேலியில் உள்ள பேஸ்புக் கட்டிடங்களில் நடந்த சோதனையில் நச்சு கலவை இருப்பதாக கண்டறியப்பட்டதை அடுத்து ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, நான்கு கட்டிடங்களும் காலி செய்யப்பட்டுள்ளது.
பேஸ்புக்கின் இரண்டு ஊழியர்கள் விஷ வாயுவால் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்ட நிலையில் இந்ந நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
காலை 11 மணியளவில் சந்தேகத்திற்கிடமான பொட்டலம் தொடர்பாக தொடர்பு கொண்ட நபர்கள், சரின் வெளிப்பாட்டின் எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை என்று பேஸ்புக் அமைந்திருக்கும் மென்லோ பார்க் நகரத்திற்கான தீயணைப்பு அதிகாரி ஜான் ஜான்சன் கூறினார்.
பேஸ்புக் தனது வளாகத்திற்கு வரும் அனைத்து பொட்டலங்களையும் சோதித்துள்ளது. அதன் முடிவு நேர்மறையாக இருந்துள்ளது. எனவே அவர்கள் தங்களது நிலையான நெறிமுறையைத் அமல்படுத்தியுள்ளனர். இப்போது, விஷ வாயு உண்மையா இல்லையா என்பதை சரிபார்க்க நாங்கள் காத்திருக்கிறோம் என்று தீயணைப்பு அதிகாரி கூறியுள்ளார்.
அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்ட பொருளை இன்னும் அடையாளம் காணவில்லை என தெரிவித்துள்ள பேஸ்புக் செய்தி தொடர்பாளர் அந்தோணி ஹாரிசன், மூன்று கட்டிடங்கள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். சம்பவயிடத்தில் ஆய்வு மேற்கொள்ள மத்திய புலனாய்வு அதிகாரிகள் விரைந்துள்ளதாக சான் பிரான்சிஸ்கோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.