இளவரசி டயானாவின் பிறந்த நாளில் அவரை நினைவு கூறும் விதமாக கூடியிருந்த மக்களுக்கு இன்ப அதிர்ச்சியளித்தார் பிரித்தானிய இளவரசர் வில்லியம்.
’வில்லியம், அவரது அப்பாவைப்போல, ஹரிதான் என்னைப்போல’ என்று இளவரசி டயானா கூறியதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் மக்களின் இளவரசி என மக்களால் அன்புடன் அழைக்கப்படும் இளவரசி டயானாவின் மகன் தான்தான், என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார் இளவரசர் வில்லியம்.
நேற்று பிரித்தானிய இளவரசி டயானாவின் பிறந்த நாள் என்பதால் ரசிகர்கள் சிலர், அவரை நினைவு கூறும் விதமாக கென்சிங்டன் அரண்மனைக்கு முன் கூடியிருந்தனர்.
காலை 5.30 முதலே அவர்கள் அங்கிருந்த நிலையில், மாலை 6.45க்கு திடீரென தங்களை நோக்கி இளவரசர் வில்லியம் நடந்து வருவதைக் கண்ட அவர்கள் இன்ப அதிர்ச்சிக்குள்ளாகினர்.
அதிக பாதுகாவலர்கள் யாரும் உடன் இன்றி நடந்து வந்த இளவரசர் வில்லியம், நேரே சென்று அங்கு கூடியிருந்தவர்களிடம் கைகுலுக்கினார்.
எதிர்பாராத இன்ப அதிர்ச்சியால் திக்கு முக்காடிப்போய், இது கனவா இல்லை நினைவா என சிலர் வாய் திறந்து அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
எனது தாயின் பிறந்த நாளின்போது நீங்கள் இங்கு பல வருடங்களாக தொடர்ந்து வந்து கொண்டிருப்பது எனக்கு தெரியும் என வில்லியம், 59 வயதான John Loughrey என்பவரிடம் கூற, அதிர்ச்சியில் உறைந்து போனார் அவர்.
தனது தாயை நினைவு கூறுவதற்காக வில்லியம் அவருக்கு நன்றி தெரிவிக்க, John Loughrey ரொம்ப நேரம் உணர்ச்சி வசப்பட்டு நடுங்கிக் கொண்டே இருந்தார்.
நீங்கள் ஏன் இளவரசி டயானாவுக்காக நினைவு கூறுதல் கூட்டம் நடத்துகிறீர்கள் என்று கேட்க, Mr Loughrey, இளவரசி டயானா இரண்டு இதயங்களுடன் பிறந்தார், ஒன்று அவருக்காக மற்றொன்று எங்களுக்காக என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
நான் இதற்குமுன் இளவரசர் வில்லியமுடன் பேசியதில்லை, அவரை பார்த்திருக்கிறேன் அவ்வளவுதான், ஆனால் அவர் என்னை நினைவு வைத்திருக்கிறார், அத்துடன் நாங்கள் இங்கு கூடியது அவரது மனதை தொட்டிருக்கிறது என்றார் John Loughrey.
Maria Scott (48) என்பவர் கூறும்போது, தற்போதிருக்கும் பிள்ளைகளுக்கு இளவரசி டயானா யார் என்றே தெரியவில்லை, அவரை மற்றவர்களுக்கு நினவூட்டுவதும், நினைவு கூறுவதும் அவசியம் என்கிறார்.
வில்லியம் திடீரென எங்களிடம் வந்து எங்களுக்கு நன்றி தெரிவித்ததை நம்பவே முடியவில்லை என்று கூறும் Maria Scott, உண்மையாகவே, அவர் இளவரசி டயானாவின் மகன் என்கிறார்.