வீடு வாங்க வேண்டுமென்ற எண்ணம் எல்லோரின் மனதிலும் இருக்கிறது. ஆனால், எகிறிப் போயிருக்கும் வீடு, காணி விலை, கட்டுமான பொருள்களின் விலை எனப் பல காரணிகளால் பலருக்கும் அந்தக் கனவு நிறைவேறாத நிலையே இருந்து வருகிறது. ஜோதிட ரீதியாகச் சொந்த வீடு யோகம், ஒவ்வொரு ராசிக்காரருக்கும் எந்த வயதில் அமையும்? பிரபல ஜோதிடர் சிவராசா இதற்கு விளக்கமளிக்கிறார்.
”சொந்தவீடு என்பது குடும்பத்தின் பாரம்பர்யத்தைக் காக்கும் சின்னம். ‘பூமிக்கு வந்த ஒவ்வொரு மனிதனும் தன் பதிவாக ஒரு வீட்டையும் மரத்தையும் விட்டுச்செல்ல வேண்டும்’ என்பார்கள். அதை அவன் சந்ததி போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்பது தொன்றுதொட்டு வரும் மரபு. அப்படி எல்லோராலும் போற்றிப்பாதுகாக்கப்படும் சொந்தவீடு 12 ராசிக்காரர்களுக்கும் எந்த வயதில் அமையும் என்பது பற்றி பார்ப்போம்.
மேஷ ராசிக்காரர்கள் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். செவ்வாய் பூமிக்காரகனென்றாலும் மேஷராசிக்காரர்களுக்கு 42 வயதுக்கு மேல்தான் சொந்தவீடு யோகம் அமையும். அதற்கு முன்பாக அமைந்திருந்தால் தசா புக்தியும் வலுவான பூர்வ புண்ணியஸ்தானமும் இருக்கிறது என்று பொருள்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் ராசியதிபதி என்பதால் இவர்களுக்குச் சுகபோகமான வீடு எளிதில் அமைந்துவிடும். ஆனாலும் சுக்கிரன் அசுர குரு என்பதால் சிலருக்கு மட்டும் வாங்கிய வீட்டை அவர்கள் காலத்திலேயே விற்க வேண்டிய நிலை ஏற்படும். அதனால் ரிஷப ராசிக்காரர்கள், சொந்தவீடு வாங்கும்போது அவர்களின் மனைவியின் பெயரில் வாங்குவது உத்தமம். ரிஷப ராசிக்காரர்களுக்கு 32 வயதில் வீடுவாங்கும் யோகம் வந்துவிடும். எப்போது வாங்கினாலும் பெருமாளை வணங்கிப் பூஜைசெய்துவிட்டு வாங்குவது நல்லது.
மிதுன ராசிக்காரர்களுக்கு புதன் ராசியதிபதி என்பதால் இவர்களுக்கு வீடு அமைவது சற்று காலதாமதமாகவே செய்யும். இவர்களுக்கு எண்ணத்திலிருக்கும் வேகம் செயல் வடிவம் பெறுவதில் சிரமங்கள் இருக்கும். மேலும், கல்வியில் மேம்பட்டு விளங்குவதாலும், வெளி மாநிலம், வெளிநாடு என்று வேலை நிமித்தமாக மாறிக்கொண்டே இருப்பதாலும் இவர்களுக்குச் சொந்தவீடு வாங்குவதில் நாட்டமிருக்காது. வேறு வேறு ஊர்களுக்கு மாறுதலாகி 45 வயதுக்குமேல் இவர்களுக்குச் சொந்த வீடு அமையும். புதனுக்குரிய வழிபாட்டுத் தெய்வம் அங்கயற்கண்ணி மதுரை மீனாட்சிதான். அவரை வணங்கி வந்தால் மிதுன ராசிக்காரர்களுக்குச் சொந்த வீடு அமையும்.
கடக ராசிக்காரர்கள், பூர்வீக சொத்து கைக்கு வரும் அமைப்புள்ளவர்கள். கடும் உழைப்பாளிகள். இவர்களுக்கு 49 வயதுக்கு மேல் சொந்தவீடு அமையும் யோகம் வாய்க்கும். இவர்களின் ராசி அதிபதி சந்திரன் என்பதால் விரைவில் சொந்த வீடு அமைய, சந்திரனைத் தலையில் சூடியிருக்கும் சிவபெருமானை வழிபட வேண்டும். இவர்களின் வீடு கோயிலுக்கு அருகிலோ, கோயிலுக்குப் பின்புறத்திலோ இருந்தால் சிறப்பானதாக இருக்கும். இவர்களிருக்கும் வீட்டில் எப்போதும் தண்ணீர் பஞ்சம் ஏற்படாது.
சிம்ம ராசிக்காரர்களுக்கு பூர்வபுண்ணிய பலத்தால் பிறக்கும்போதே சொந்தவீடு அமைப்பு இருக்கும். அப்படியில்லாவிட்டால் மனைவி வழியில் சொந்த வீடு அமையும். சிலருக்கு வீட்டோடு மாப்பிள்ளையாகச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். இவற்றையெல்லாம் தாண்டி அவர்களின் உழைப்பில் சொந்த வீடு வாங்க வேண்டுமென்றால் 60 வயதுக்குமேல்தான் சொந்த வீடு யோகம் அமையும். அதற்குப் பிறகு அவர்கள் இரண்டு மூன்று வீடுகள்கூட வாங்கும் அமைப்பு ஏற்படும்.
கன்னியும் மிதுனமும் புதனின் ஆதிக்கம் பெற்றவர்களென்றாலும் நட்சத்திரங்களின் குணங்களால் மாறுபட்டு இருப்பார்கள். கன்னி ராசிக்காரர்களில் பலர் கூட்டுக்குடும்பமாக இருப்பார்கள். அதனால் அத்தனை சீக்கிரம் தனியாகப்போய் வீடு வாங்கமாட்டார்கள். அப்படியே இருந்தாலும் இருக்கும் வீட்டிலேயே சில மாறுதல்களைச் செய்துகொள்வார்கள். ரொம்பவும் சென்டிமென்ட் பார்ப்பார்கள். கன்னி ராசிக்காரர்களுக்கு சொந்த வீடு அமைவதற்கு அவர்களின் மனோபாவம் மிக முக்கிய காரணமாக இருக்கும். நினைத்தால் 26 வயது முதல் 92 வயதுவரை எப்போது வேண்டுமானாலும் இவர்கள் வீடு வாங்குவார்கள்.
துலாம் ராசிக்காரர்கள் ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ என்று இருப்பார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் அதற்கொரு பட்ஜெட் போட்டு வைத்துக்கொண்டு சுற்றுலாவோ யாத்திரையோ சென்று செலவழித்துவிட்டு வருவார்கள். இல்லாவிட்டால் விலைஉயர்ந்த நகைகள் வாங்குவார்கள். இவர்கள் செலவுகளைக் குறைத்துச் சிக்கனமாக இருக்க வேண்டும். முயற்சி செய்தால்தான் சொந்தவீடு அமையும். 36 வயது முதல் 41 வயதுக்குள் இவர்கள் முயற்சி செய்தால் இடைநிலை யோகமாக இவர்களுக்குச் சொந்த வீடு அமைய வாய்ப்புண்டு. அப்படி வீடு அமையும்போது, இவர்களிடம் ஒன்று சொந்தமாக மனை இருக்கும் அல்லது பாதிப்பணம் மனைவி வழியிலோ உறவினர்கள் மூலமாகவோ கிடைத்துவிடும்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சொந்த வீடு நகருக்கு வெளியில் மாடி வீடாக அமையும் வாய்ப்புகள் அதிகம். வீடு அமைவதில் இவர்களுக்குச் சில சிரமங்களும் தடைகளும் இருந்தாலும் இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு 47 வயதுக்கு மேல்தான் சொந்த வீடு அமையும். குறிப்பாகச் சொந்த வீட்டை மனைவியின் பெயரில் வாங்குவது நல்லது. இவர்கள் இதற்கென வழிபட வேண்டிய தெய்வம் திருச்செந்தூர் முருகன். எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் விநாயகர்துதியை முதலில் செய்வது இவர்களுக்குச் சிறப்பு சேர்க்கும்.
தனுசு ராசிக்காரர்கள் குருவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இவர்களுக்கு 5 முதல் 9 வயதுக்குள்ளாகவே சொந்த வீடு அமைந்துவிடும். மகன் பேரிலும் பேரன் பெயரிலும் வீட்டை எழுதி வைப்பவர்கள் இந்த ராசிக்காரர்கள்தான். இதற்குக் காரணம், ராசி அதிபதியான குருவை கோச்சார சந்திரன் அடிக்கடி சந்திக்க நேர்வதால் குருசந்திர யோகம் ஏற்பட்டு இவர்களுக்குச் சொந்த வீடு எளிதாக அமைகிறது.
மகர ராசிக்காரர்களுக்கு அதிபதி சனி பகவான். ‘குரு கொடுத்தால் சனி கெடுப்பார், சனி கொடுத்தால் யார் தடுப்பார்’ என்பது ஜோதிடப் பழமொழி. ஆனால், அப்படிப்பட்ட சனிபகவானே ஒருவருக்கு வீட்டை அமைத்துத்தருகிறார் என்றால், அது மிகப்பெரிய விஷயமாகும்.
மகர ராசிக்காரர்கள் வாங்கிய அல்லது கட்டிய வீடு மூன்று நான்கு தலைமுறைக்குக்கூட நிலைத்து நீடிக்கும். இவர்களில் பலருக்கும் மூன்று நான்கு வீடு அமைவதுண்டு. இவர்களுக்கு 50 வயதுக்கு மேல்தான் சொந்த வீடு அமையும். இவர்கள் தங்களின் வீட்டை மனைவி, மகன், மகள் பெயரில் வாங்குவது நல்லது.
கும்ப ராசிக்காரர்கள் பெரும்பாலும் கூட்டுக்குடும்ப வாழ்க்கையிலிருப்பார்கள். இவர்கள் தனி வீடு வாங்க அத்தனை எளிதாக முயற்சி செய்ய மாட்டார்கள். அண்ணன் தம்பிகள் சேர்ந்து ஒரு மனையை வாங்கி, அதில் ஆளுக்கொரு பகுதியில் குடியிருப்பார்கள். இவர்களுக்கு 37 வயதுக்கு மேல் சொந்த வீடு அமையும். ஆனாலும் அதை வாடகைக்கு விட்டுவிட்டு கூட்டுக் குடும்பத்தில்தானிருப்பார்கள்.
மீன ராசிக்காரர்கள் எந்தச் செயலை எடுத்தாலும் அதில் பரபரப்போடு செயல்பட்டு வெற்றிபெற்ற பிறகுதான் உட்காருவார்கள். இவர்கள் மனதில் நினைத்த காரியத்தை எப்படியும் முடிக்கும் இவர்களுக்கு 22 வயதுக்குமேல் எப்போது முயன்றாலும் சொந்த வீடு அமையும். ஆனால், வீண் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. இல்லாவிட்டால் சொந்த வீடே இவர்களுக்குச் சுமையாகிப்போகும் வாய்ப்புள்ளது” என்கிறார் ஜோதிடர் சிவராசா.