தற்பொழுது ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதுவரை 8 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இந்திய அணி இரண்டாவது அணியாக அரையிறுதியை உறுதி செய்துள்ளது.
இந்த நிலையில் இந்த தொடரில் இறுதி ஓவர்களில் இறங்கிய ஓரளவு சிறப்பான ஆட்டத்தினை விளையாடி வந்தாலும் அதிகமாக விமர்சிக்கப்பட்டு இருக்கிறார் என்றால் அணியின் மூத்த வீரர் மகேந்திர சிங் தோனி. 8 போட்டிகளில் ஆடியுள்ள அவர் 7 இன்னிங்சில் 223 ரன்களை 93 ஸ்ட்ரைக்ரேட் என்ற வேகத்தில் எடுத்து சிறப்பாகதான் விளையாடி உள்ளார்.
ஆனால் அவர் மீதான அதிகபடியான விமர்சனங்கள் வருவதால், உலகக்கோப்பை போட்டி தான் அவர் இந்திய அணியின் வண்ண ஆடையில் விளையாடும் கடைசி போட்டியாக இருக்கும் என பெயரை வெளியிட விரும்பாத பிசிசிஐ நிர்வாகி ஒருவர் ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஜூலை 14ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்று அதில் இந்திய அணி வெற்றி பெற்றால், இந்தியாவின் சிறந்த கேப்டனை வழி அனுப்பி வைப்பதற்கு, அதனைவிட சிறந்த பிரிவு உபச்சார தருணம் இருக்காது என தெரிவித்திருக்கிறார்.
மேலும் இந்த தொடரில் அவர் ஆடிய விதத்தினை மூத்த வீரர்களான சச்சின், கங்குலி உள்ளிட்டவர்கள் மட்டுமல்லாமல், ஊடகங்களும் கடுமையாக விமர்சித்திருக்கிறது. அதோடு விவாதப் பொருளாகவும் இதனை பேசி வருகிறார்கள். இதனால் இதற்கு மேல் விளையாடாமல் உலக கோப்பையுடன் ஓய்வு பெறுவதற்கு முடிவு செய்துள்ளதாக அந்த நிர்வாகி தெரிவித்துள்ளார்.
ஏனெனில் உலக கோப்பை போட்டிக்கு பிறகு, அடுத்த ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடைபெற உள்ளதால், புதிய தேர்வுக்குழு இளம் வீரர்களை தேர்வு செய்ய விருப்படும் போது, அப்போது அணியின் மூத்த வீரர் ஆக தோனி குறுக்கிடாமல் இருக்க விரும்பும். அதனால் அப்பொழுது தோனி புறக்கணிக்கப்பட வேண்டிய அவசியம் இருப்பதால், முன்கூட்டியே இந்த உலகக் கோப்பையுடன் அவர் ஓய்வு அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது, என அவர் தெரிவித்தார்.
மேலும் கடந்த 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் ட்ராபி போட்டி முடிந்தவுடன் அடுத்த இரண்டு ஆண்டுகள் நிச்சயமாக தோனி விளையாட வேண்டும் என தேர்வுகுழு முடிவு செய்து, அவர் உலக கோப்பை போட்டியில் விளையாடி வந்துள்ளார். தற்போதும் அவரை யாரும் ஓய்வு பெறச் சொல்லி கேட்கவில்லை. ஆனாலும் அவர் ஓய்வு பெறும் முடிவில் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் உலகக் கோப்பை போட்டியின் அரையிறுதி போட்டி அல்லது இறுதிப் போட்டி தான் இந்திய வண்ணங்களில் தோனி விளையாடும் இறுதிப் போட்டியாக இருக்கும் என அவர் சூசகமாக தெரிவித்துள்ளார். தற்பொழுது அரையிறுதிப் போட்டி என்ற ஒரு முக்கியமான கட்டத்தில் இந்திய அணி இருப்பதால், இது போன்ற ஒரு சென்சிட்டிவான, சீரியஸான ஒரு விஷயத்தினை பேசினால் மனதளவில் இந்திய வீரர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இது குறித்து அதிகம் பேச விரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதலால் அரையிறுதிப் போட்டி அல்லது இறுதிப் போட்டி முடிந்தவுடன் மகேந்திர சிங் தோனி தன்னுடைய ஓய்வு அறிவிப்பார் என அவர் தெரிவித்துள்ளார். தோனி எப்போது எந்த முடிவை எடுப்பார் என யாருக்கும் தெரியாது. அது அவருக்கு மட்டும்தான் தெரியும். ஏனெனில் இப்படித்தான் 2014 ஆம் ஆண்டு, ஆஸ்திரேலிய தொடரின் பொழுது மூன்றாவது போட்டி முடிந்தவுடன், இன்னும் ஒரு போட்டி எஞ்சியிருக்கும் வேலையிலே தன்னுடைய டெஸ்ட் கேப்டன் பொறுப்பை மட்டுமல்லாமல், டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்தவர் தோனி.
அதேபோல ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக இந்திய அணி விளையாடி கொண்டிருக்கும் நிலையிலேயே, திடீரென கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வழிவிடுவதாகவும் தெரிவித்து கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியவர். ஏன் அவரது திருமணத்தையே திடீரென தான் நடத்தினார். அதனால் உலக கோப்பையை முடிந்த வேகத்தில் அவர் இந்திய அணியின் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவார் என்றே தெரிகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தொடரில் சிறப்பாக விளையாடினாரோ, விளையாடவில்லையோ, சூழலுக்கேற்றவாறு ஆடினாரோ, இல்லையோ எது இருந்தாலும் தோனி என்றால் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் கிரிக்கெட்டை தெரியாதவர்கள் கூட தெரிந்த பிரபலமாக இருப்பதால் அனைவருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். இந்தியாவிற்கு மூன்று விதமான ஐசிசி கோப்பைகளையும் வாங்கித் தந்த ஒரே கேப்டன் என்ற பெருமை தோனிக்கு உண்டு. உலகின் முதல் கேப்டனும் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. தோனி என்ன செய்வாரோ? ஜூலை 9,11,14 அல்லது அவரது பிறந்த நாளான ஜூலை 7 ஆம் தேதி இந்த அறிவிப்பை வெளியிடலாம்.