உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பிரதானமாக செயற்பட்டவர்களில் ஒருவரான சஹ்ரானின் தங்கை உள்ளிட்ட உறவினர்கள் மூவர் விசாரணைக்காக கல்முனை நீதவான் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டனர்.
சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் மரணமடைந்தவர்களின் தகவல்களை உறுதிப்படுத்தி மரண சான்றிதழ் வழங்குவதங்காகவே அவர்கள் இன்று மன்றில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு மரண விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர்களில் சஹ்ரானின் தங்கையான நியாஸ் மதனியா மற்றும் அவரது கணவர் எம்.எம். நியாஸ், சாய்ந்தமருது தாக்குதலில் உயிரிழந்த ஊடகவியலாளர் எனக் கூறப்படும் நியாஸ் என்பவரின் மனைவி அஸ்மியா உள்ளிட்டோர் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்து வரப்பட்டனர்.
குறித்த விசாரணையின் போது சஹ்ரானின் தங்கை உள்ளிட்ட உறவினர்கள் தனித்தனியாக ஆஜர்படுத்தப்பட்டு நீண்ட நேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் கடந்த ஏப்ரல் 26ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்து உயிர் தப்பிய ஷஹ்ரான் காசிமின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா ஹாதியா, கடந்த புதன்கிழமை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மரணமடைந்தவர்களின் தகவல்களை உறுதிப்படுத்த அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதனால், சஹ்ரானின் மனைவி இம்முறை கல்முனை நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.