பாரிஸ் இரண்டு நட்சத்திர ஹொட்டல் ஒன்றின் பின்புறச்சுவரில் துளையிட்டு விலையுயர்ந்த பொருள் ஒன்றை திருடிச் சென்றனர் திருடர்கள்.
திருடப்பட்ட பொருள் என்ன தெரியுமா?
விலையுயர்ந்த Petrus மற்றும் Romanee Conti வகை ஒயின் பாட்டில்கள்! அந்த ஹொட்டலின் மதுபானம் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் அறையின் சுவரை துளையிட்டு உள்ளே நுழைந்த திருடர்கள் பல்லாயிரக்கணக்கான யூரோக்கள் மதிப்புடைய 150 ஒயின் பாட்டில்களை திருடிச்சென்றுள்ளனர்.
மறுநாள் ஹொட்டல் ஊழியர்கள் அந்த அறைக்கு சென்றபோது அதன் சுவரில் துளையிடப்பட்டிருப்பதைக் கண்டனர்.
அந்த ஹொட்டல் மிகச்சிறந்த மதுபானங்களை வழங்கும் ஹொட்டல் என்று பெயர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது அந்த மதுபானங்கள் சேமித்து வைக்கும் அறை புதுப்பிக்கப்பட்டு வருகிறது. திருடப்பட்ட மதுபான பாட்டில்களின் மதிப்பு 400,000 யூரோக்களிலிருந்து 600,000 யூரோக்கள் வரை இருக்கும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் 2009இலும், பாரீஸின் சிறந்த ஹொட்டல்கள் சிலவற்றிலிருந்து 500 மதுபான பாட்டில்களை திருடியதாக சந்தேகத்தின் பேரில் 44 வயது நபர் ஒருவரை பிரான்ஸ் பொலிசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.