உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்குள் நுழையும் நான்காவது அணி!

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதி ஆட்டத்திற்கான வாய்ப்பு பாகிஸ்தானை விட நியூசிலாந்துக்கே பிரகாசமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட்டில் அவுஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து அணிகள் அரைஇறுதியை எட்டி விட்டது. எஞ்சிய ஒரு இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான் இடையே போட்டி நிலவுகிறது.

அதாவது பாகிஸ்தான் அணி தனது கடைசி லீக்கில் வங்கதேசத்தை நாளை சந்திக்கிறது.

இதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால், பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் தலா 11 புள்ளிகளுடன் சமநிலை வகிக்கும்.

அப்போது ரன்ரேட் அடிப்படையில் ஒரு அணி அரைஇறுதிக்கு தேர்வாகும். நியூசிலாந்து அணி ரன்ரேட்டில் (+0.175) வலுவாக இருப்பதால் அவர்களுக்கே வாய்ப்பு அதிகமாகும்.

அதே சமயம் ரன்ரேட்டில் பின்தங்கியுள்ள (-0.792) பாகிஸ்தான் அணி அரைஇறுதியை எட்டவேண்டும் என்றால் வங்காளதேசத்துக்கு எதிராக இமாலய வெற்றி பெற்றாக வேண்டும்.

அதாவது முதலில் பாகிஸ்தான் அணி ஆடி 400 ரன்கள் எடுத்தால் வங்காளதேசத்தை 316 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும்.

350 ரன்கள் குவித்தால், வங்காளதேசத்தை 38 ரன்னில் சுருட்ட வேண்டும். பாகிஸ்தான் 2-வது பேட்டிங் செய்தால் எந்த பிரயோஜனமும் இருக்காது.

எனவே, உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி நான்காவது அணியாக அரையிறுதிக்குள் நுழைய போவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.