நுவரெலியா மாநகர சபையின் அசமந்தபோக்கால் இறந்த உடலை தகனம் செய்ய முடியாது உறவினர்கள் அசெளகரியம் அடைந்த சம்பவம் ஒன்று நேற்று புதன்கிழமை நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக தெரியவருவதாவது,
நுவரெலியா மாநகர சபைக்கு உட்பட்ட பம்பரகலை பகுதியில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலத்தை நுவரெலியா மாநகரை சபைக்கு சொந்தமான தகனசாலையில் தகனம் செய்வதற்காக உயிரிழந்தவரின் உறவினர்கள் கடந்த முதலாம் திகதியன்று நுவரெலியா மாநகர சபையில் அதற்கான கட்டணத்தை செலுத்தி உரிய ரசீதையும் பெற்றுக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து நேற்றுக் காலை 10.00 மணியளவில் உயிரிழந்தவரின் உடலை தகனம் செய்வதற்காக நேரம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் உறவினர்கள் சடலத்தை நுவரெலியா மாநகர சபை தகன சாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு கடமையில் இருந்த ஊழியர்கள் தகனம் செய்ய முடியாது எனவும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். இதனைக் கேள்வியுற்ற உறவினர்கள் மின்சார சபைக்கு சென்று இது தொடர்பாக வினவியபோது மின்சார சபை ஊழியர் ஒருவர் இன்று மாலை (நேற்று) 5 மணி வரை திருத்த வேலைகள் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதாகவும் இது தொடர்பான தகவல் அனைத்து அரச தனியார் நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த விட யங்களை கருத்தில் கொள்ளாது நுவரெலியா மாநகர சபை தகனம் செய்வதற்கு பணம் பெற்றுக் கொண்டுள்ளமையானது அவர்களின் அசமந்த போக்கை எடுத்துக் காட்டுவதாகவும் இதனால் உறவினர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இவ்வாறான விடயங்களில் நுவரெலியா மாநகர சபை பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதற்கு மாற்றீடாக வேறு ஏற்பாடுகளை அதாவது எரிவாயு ஏற்பாடுகளையேனும் செய்திருக்க வேண்டும் எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் தாங்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக நுவரெலியா மாநகர சபை முதல்வர் சந்தணலால் கருணாரத்னவை தொடர்பு கொண்டு கேட்ட போது, இந்த விடயத்தை உடனடியாக தீர்த்து வைத்து அதற்கான எரிவாயுவை ஏற்பாடு செய்து கொடுக்குமாறு தான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் இனிமேல் இவ்வாறான குறைபாடுகள் நடைபெறாமல் இருப்பதற்கு தான் நட வடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.