முஸ்லிம்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அத்தியாவசிய தேவை இன்றி கண்டி நகருக்கு வருவதையும் கண்டி நகர் ஊடாக பயணம் செய்வதையும் தவிர்த்துக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபை விசேட எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
பொதுபல சேனா அமைப்பினால் எதிர்வரும் 7ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை கண்டியில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாவின் கண்டி மாவட்ட கிளை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
பொதுபல சேனா அமைப்பு 7ஆம் திகதி கண்டியில் மாநாடொன்றை ஏற்பாடு செய்துள்ளமை அனைவரும் அறிந்ததே. அந்த மாநாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட உள்ளதாக அறிய முடிகின்றது.
அத்தோடு இதன் மூலம் முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகளை பெருமளவில் தடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இவ்வாறான திட்டங்களை முறியடிப்பதற்கு 7ஆம் திகதி வரை நோன்பு நோற்கு முஸ்லிம் சமுதாயத்தின் பாதுகாப்பிற்காகவும் நாட்டில் சமாதானம் நிலவுவதற்காகவும் பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும் சகல முஸ்லிம் மக்களிடமும் கோரப்படுகின்றது.
மேலும் இந்த சூழ்நிலையை கருத்திற்கொண்டு ஞாயிற்றுக்கிழமை அத்தியாவசிய தேவை இன்றி கண்டி நகருக்கு வருவதையும் கண்டி நகர் ஊடாக பயணம் செய்வதையும் தவிர்த்துக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.