துபாய் அரசரின் மனைவியாகிய இளவரசி ஹயா, தனது பிரித்தானிய பாதுகாவலருடன் நெருக்கம் காட்டியதைக் குறித்து அரசருக்கு சந்தேகம் ஏற்பட்டதாலேயே, அவர் லண்டனுக்கு தப்பியோடிவிட்டதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இளவரசி ஹயா தங்கள் வீட்டில் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டிருந்த பிரித்தானியரான ஒரு பாதுகாவலருடன் நெருக்கம் காட்டியதையடுத்து அவரது கணவரும் துபாய் அரசருமான Sheikh Mohammed bin Rashid al-Maktoumக்கு சந்தேகம் ஏற்பட்டதாகவும், அதனால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அஞ்சியே இளவரசி ஹயா அரண்மனையிலிருந்து தப்பியோடியதாகவும் அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசரின் ஆறு மனைவிகளில் ஒருவரான இளவரசி ஹயா, அந்த பாதுகாவலருக்கு ஏராளமான பரிசுகளை வாரி வழங்கியுள்ளார்.
இது குறித்து அறிந்த மூத்த ராஜ குடும்பத்தினர், இது முறையற்ற நெருக்கம் என விமர்சித்ததாக பிரபல பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், அரசரின் இன்ஸ்டாகிராம் கணக்கில் அவர் ஒரு கவிதையை எழுதியுள்ளார். அதில் ‘துரோகியே, விலை மதிப்பில்லாத நம்பிக்கைக்கு துரோகம் செய்து விட்டாய், உன் விளையாட்டு வெளியே தெரிந்துவிட்டது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அந்த பாதுகாவலர், பிரித்தானியாவின் UK Mission Enterprise Limited என்னும் நிறுவனத்தின் சார்பில் பணியமர்த்தப்பட்டிருந்தார்.
இந்த செய்தி குறித்து இளவரசி ஹயா, பாதுகாவலர் மற்றும் UK Mission Enterprise Limited ஆகியோரின் பிரதிநிதிகளிடம் கருத்து கேட்டபோது, அவர்கள் யாருமே பதிலளிக்கவில்லை.