6 மாதம் கேட்ட நளினிக்கு 1 மாதம்: நீதிபதிகளிடம் கண்ணீர் மல்க நன்றி

ராஜீவ்காந்தி கொலை வழக்கு விவகாரம் தொடர்பாக ஆயுள் தண்டனை பெற்றுள்ள நளினி மகளின் திருமணத்திற்காக இன்று வாதாட நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

தமிழகத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று மத்திய சிறையில் இருக்கும் நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அதில், என்னுடைய மகள் பிரித்தானியாவில் வசித்து வருகிறார். அவருக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும்.

எனவே, எனக்கு 6 மாதம் பரோல் வேண்டும் என்று சிறைத்துறை தலைவர், வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோருக்கு கோரிக்கை மனு கொடுத்தும், இதுவரை என் மனுவை பரிசீலிக்கவில்லை. கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் எனக்கு 6 மாதம் பரோல் வழங்க உத்தரவிட வேண்டும். இந்த வழக்கில் நேரில் ஆஜராகிவாதிட எனக்கு அனுமதி வழங்கவேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், நிர்மல்குமார் ஆகியோர் முன்பு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது, நளினியை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதில் சிக்கல் உள்ளது என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இதை நீதிபதிகள் ஏற்க வில்லை. நளினிக்கு நேரில் ஆஜராகிவாதிட உரிமை உள்ளது என்று கருத்து கூறினர். பின்னர், நளினி சிறையில் இருந்தபடி இந்த வழக்கில் காணொலி காட்சி மூலம் வாதிட விருப்பமா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அப்போது நளினி காணொலி காட்சி மூலம் வாதம் செய்ய விருப்பம் இல்லை, நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதிடவே விருப்பம் என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து அரசு தரப்பு சார்பில் அவர் நேரில் வாதிட வந்தால், பொலிஸ் பாதுகாப்பு பலமாக இருக்க வேண்டும் என்ற காரணங்களை கூறியது.

ஆனால் நீதிபதிகள் அவருடைய வழக்கில் வாதட உரிமை இருக்கிறது என்று கூறி, வருகிற ஜூலை 5-ந்தேதி மதியம் 2.15 மணிக்கு நளினியை ஆஜர்படுத்த வேண்டும் என்று கூறி இருந்தனர்.

அதன் படி இன்று நளினி பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜாராகியுள்ளார். மகள் திருமண ஏற்பாடுகளை கவனிக்க 6 மாதம் பரோல் கோரியுள்ளதால், அவரின் வாதம் இன்று என்னவாக இருக்கும் என்று பலரின் எதிர்பார்ப்பாக இருந்தது.

அதைத் தொடர்ந்து நீதிபதிகள் முன்பு ஆஜரானார் நளினி. முதலில் நேரில் வாதாட அனுமதி அளித்தற்காக கண்ணீர் மல்க நன்றி கூறினார். அதன் பின்னர் எழுதி வைத்திருந்த வாதத்தை நீதிபதிகளிடம் வாசித்து தனது தரப்பு கோரிக்கையை முன்வைத்தார்.

தான் சிறை விதிகளை முறையாக கடைப்பிடிப்பதை விளக்கிப் பேசிய நளினி தனது மகள் திருமணத்திற்காக தனக்கு 6 மாத கால பரோல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

ஆனால் அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நடராஜன் இதற்கு ஆட்சேபனை தெரிவித்தார். பேரறிவாளனுக்கு ஒரு மாத கால பரோல் அளிக்கப்பட்டது. அதேபோல நளினிக்கும் அளிக்க அரசு தயாராக இருப்பதாகஅவர் தெரிவித்தார்.

இதையடுத்து பரோலில் விடுதலை செய்ய நளினி தரப்பில் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று கோர்ட் நிபந்தனை விதித்துள்ளது.

மேலும் தனது உறவினர்கள், நண்பர்கள், தங்குமிட முகவரி உள்ளிட்டவற்றை சிறைத்துறைக்கு நளினி அளிக்க வேண்டும். இவற்றை 10 நாட்களில் சிறைத்துறை மற்றும் காவல்துறையினர் ஆய்வு செய்து முடித்து பரோல் திகதியை முடிவு செய்ய வேண்டும்.

பரோல் காலத்தில் அரசியல் தலைவர்களை அவர் சந்திக்கக் கூடாது. செய்தியாளர்களைச் சந்திக்கக் கூடாது. பரோல் நிபந்தனைகளை மீறினால் உடனடியாக பரோல் ரத்தாகி விடும் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியிருந்தனர்.