நேபாளம் நாட்டில் காப்பீடு பணத்தை அடையும் நோக்கத்தில் 4 வயது மகளின் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.
நேபாளம் நாட்டில் சிராஹா மாவட்டத்தை சேர்ந்த மவுலாபூர் நகராட்சி பகுதியில் குட்டை ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை சுமார் 4 வயது மதிக்கத்தக்க சிறுமியின் சடலம் மிதப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் அந்த சிறுமியின் கழுத்தை யாரோ நெரித்துக் கொன்றது தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பில் முதற்கட்டமாக இறந்த சிறுமியின் தந்தையான ராம் கிஷோர் யாதவ் என்பவரிடம் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
அதில், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்ட ராம் கிஷோர் தனது 4 வயது மகள் லட்சுமியின் பெயரால் வங்கியில் ரூ.25 லட்சத்திற்கான காப்பீடு கணக்கு ஒன்றை தொடங்கியுள்ளார்.
இந்த காப்பீடு கணக்குக்கான முதல் தவணையாக ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாயையும் செலுத்தியுள்ளார்.
காப்பீடு செய்யப்பட்ட திகதியில் இருந்து ஒரு மாதத்துக்குள் இறந்துப் போனாலும் முழுத்தொகையான 25 லட்சம் ரூபாய் கிடைத்து விடும் என்பதால் அவரது மூளை அவசரகதியில் திட்டமிட்டுள்ளது.
இதனையடுத்து, காப்பீடு பணத்தை அடையும் நோக்கத்தில் பெற்ற மகள் என்றும் கருதாமல் லட்சுமியின் கழுத்தை நெரித்து ராம் கிஷோர் யாதவ் கொன்றுள்ளார்.
பின்னர் சடலத்தை அருகாமையில் உள்ள குட்டையில் வீசியுள்ளார். இந்த விபரத்தை கண்டுபிடித்த பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.