இந்தியாவின் கேரள மாநிலத்தில் 16 வயது மகளை தாய் கொலை செய்துவிட்டு கிணற்றில் தூக்கிவிசியதாக கூறப்பட்ட நிலையில், கிணற்றில் வீசும் போது சிறுமி உயிரோடு இருந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் மஞ்சுஷா. இவருக்கு மீரா (16) என்ற மகள் உள்ளார்.
கணவரை பிரிந்து மகளுடன் வாழ்ந்து வந்த மஞ்சுஷாவுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் அனீஷ் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது.
இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். தாயின் தொடர்பை அறிந்த மீரா எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் தனது மகள் மீராவை அனீஷுக்கு திருமணம் செய்துவைக்க நினைத்த மஞ்சுஷா, திருமணத்துக்கு பின்னரும் அவருடனான கள்ளக்காதலை தொடர நினைத்தார்.
ஆனால் இந்த திருமணத்துக்கு மீரா ஒத்து கொள்ளவில்லை. இதனால் மீரா மீது மஞ்சுஷாவும், அனீஷும் ஆத்திரத்தில் இருந்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 11ஆம் திகதி இருவரும் சேர்ந்து துப்பட்டாவால் மீராவின் கழுத்தை நெரித்தனர்.
இதையடுத்து மீரா சுயநினைவை இழந்தார். அவர் இறந்துவிட்டார் என கருதி பைக்கில் உட்காரவைத்து அனீஷ் வீட்டுக்கு சென்று மீரா உடலில் கல்லை கட்டி கிணற்றில் தூக்கி போட்டதாக கூறப்பட்டது.
இதன்பின்னர் மீரா தற்கொலை செய்ததாக மஞ்சுஷா நாடகமாடினார்.
ஆனால் பொலிஸ் விசாரணையில் அனைத்து உண்மைகளும் தெரியவந்த நிலையில் பொலிசார் இருவரையும் கைது செய்து, கிணற்றில் அழுகிய நிலையில் இருந்த மீராவின் சடலத்தை கைப்பற்றினார்கள்.
இதையடுத்து மஞ்சுஷா மற்றும் அனீஷிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, முதலில் மீரா கழுத்தை நெரித்ததில் அவர் இறந்ததாக இருவரும் நினைத்தனர்.
ஆனால் பைக்கில் சென்று கொண்டிருந்த போது அவர் உடலில் அசைவு இருந்ததையடுத்து அவர் இறக்கவில்லை என தெரிந்த கொண்ட மஞ்சுஷா பின்னரே உடலில் கல்லை கட்டி கிணற்றில் தூக்கி போட்டதாக பொலிசிடம் கூறியுள்ளார்.
ஆனால் பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்னரே மீராவின் கழுத்து நெரிக்கப்பட்ட பின்னர் அவர் உயிருடன் இருந்தாரா என தெரியவரும் என பொலிசார் கூறியுள்ளனர்.