காதல் திருமணம் செய்த புதுமண ஜோடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் தமிழகத்தில் இடம்பற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சோலைராஜ் (வயது 23). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வைப்பாறு பகுதியில் உள்ள உப்பளத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
அங்கு விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி பல்லாகுளத்தை சேர்ந்த பேச்சியம்மாள் என்ற ஜோதி (21) என்பவரும் வேலை பார்த்து வந்தார். அப்போது அவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது. அவர்களது காதலுக்கு இருவரது வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்பு பெரியார்நகரில் புதுமண ஜோடிகள் தனியாக வசித்து வந்தனர். திருமணத்திற்கு பின் சோலைராஜ் மட்டும் கூலிவேலைக்கு சென்று வந்தார். ஜோதி வீட்டில் இருந்து வந்தார்.
நேற்று இரவு கணவன்- மனைவி இருவரும் காற்றுக்காக வீட்டுக்கு வெளியே படுத்து தூங்கினர். இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு மர்ம கும்பல் அரிவாள்களுடன் அங்கு வந்தது. அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் வீட்டின் முன் படுத்து தூங்கிக் கொண்டிருந்த கணவன்- மனைவி இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இதில் பலத்த வெட்டுக்காயமடைந்த அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.