பிரித்தானியாவில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி போலந்து நாட்டவர்களை அடிமைகளாக வைத்திருந்த ஐரோப்பாவின் மாபெரும் மோசடிக்கூட்டம் சுற்றி வளைக்கப்பட்டது.
அந்த கும்பலிலிருந்து தப்பிய Miroslaw Lehmann (38)என்பவர் கொடுத்த வாக்கு மூலத்தில், தான் போலந்தில் சிறையிலிருந்ததாகவும், போலந்து சிறைகளைவிட மோசமான சூழலில் தான் பிரித்தானியாவில் அடிமையாக வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலந்து நாட்டைச் சேர்ந்த ஒரு குடும்பம் இந்த மோசடியில் முக்கிய பங்கு வகித்துள்ளது.
சிறையிலிருந்து விடுதலையானவர்கள், குடிக்கு அடிமையானவர்கள் என பலதரப்பட்டவர்களை அணுகி, அவர்களுக்கு புது வாழ்வு ஏற்படுத்திக் கொடுப்பதுபோல், ஆசை வார்த்தை கூறி, அவர்களை பிரித்தானியாவுக்கு கொண்டு வரும் அந்த கும்பல், அடிப்படை வசதிகள் கூட இல்லாத அறைகளில் அவர்களை தங்கச் செய்துள்ளது.
அவர்கள் வேலை செய்யும் பணத்தை, தாங்கள் அவர்களை பிரித்தானியாவிற்கு அழைத்து வந்ததற்கான கூலி என்று கூறி பிடுங்கிக் கொள்ளும் அந்த கும்பல், 50 பென்ஸ்களை மட்டுமே நாளொன்றிற்கு ஊதியமாக கொடுத்துள்ளது.
நடப்பதை வெளியே சொன்னால் அடி உதை, கிட்னி திருடப்படும் என மிரட்டல், மற்றவர்கள் முன் நிர்வாணமாக்கி அவமானப்படுத்துதல் என பல்வேறு சித்திரவதைகளை அனுபவித்த Miroslaw, அடிமைத்தனத்துக்கு எதிரான தொண்டு நிறுவனமான Hope for Justice என்னும் அமைப்பில் பணியாற்றும் போலந்து நாட்டவர் ஒருவரின் உதவியுடன் தப்பியுள்ளார்.
பின்னர் Hope for Justice அமைப்பு பொலிசாருக்கு தகவல் அளிக்க, ஐரோப்பாவின் மாபெரும் அடிமைப்படுத்தும் கூட்டம் ஒன்று பிரித்தானியாவில் மக்களை அடிமைப்படுத்தி அவர்களது பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததை கண்டு பொலிசார் அதிர்ந்து போனார்கள்.
இந்த கூட்டத்தால் சுமார் 400 பேர் வரை பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. தற்போது இந்த கும்பலைச் சேர்ந்த 8பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு 55 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.