இந்த புகைப்படம் ஏன் விமர்சிக்கப்படுகிறது தெரியுமா?

கனடாவின் கியூபெக் மாகாண கல்வி அமைச்சர், பெண்கள் கல்விக்காக பிரச்சாரம் மேற்கொண்டு வரும் மலாலா யூசுப்சாயுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டதற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார்.

கியூபெக் மாகாண கல்வி அமைச்சர் ஜீன்-ஃபிராங்கோயிஸ் ராபர்ஜ், பிரான்சில் வைத்து அமைதிக்கான நோபல் பரிசுப்பெற்ற பாகிஸ்தானை சேர்ந்த மலாலாவை சந்தித்துள்ளார். மலாலாவுடன் தான் நிற்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்ட ராபர்ஜ், இச்சந்திப்பின் போது, கல்வி மற்றும் சர்வதேச மேம்பாட்டுக்கான அணுகல் பற்றி இருவரும் விவாதித்ததாக குறிப்பிட்டார்.

சமீபத்தில், கியூபெக் ஒரு சர்ச்சைக்குரிய சட்டத்தை நிறைவேற்றியது, ஆசிரியர்கள் உட்பட சில அரசு ஊழியர்கள் பணியில் மத அடையாளங்களை அணிவதைத் தடைசெய்தனர். புகைப்படத்தில் மலாலா தலையில் முக்காடு அணிந்திருப்பதை கண்ட பலர், குறித்த சட்டத்தை மேற்கோள் காட்டி, ராபர்ஜை கடுமையாக விமர்சித்தனர்.

திருமதி மலாலா கியூபெக்கில் கற்பிக்க விரும்பினால், அதில் உங்கள் நிலைப்பாடு என்ன என்று பத்திரிகையாளர் சலீம் நாடிம் வால்ஜி ட்விட்டரில் வாயிலாக ராபர்ஜிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த ராபர்ஜ், இது ஒரு மகத்தான மரியாதை என்றும், கியூபெக்கில், பிரான்சிலும் மற்ற பிற சகிப்புத்தன்மையுள்ள நாடுகளிலும், ஆசிரியர்கள் தங்கள் செயல்பாடுகளைச் செய்வதில் மத அடையாளங்களை அணிய முடியாது என்று நான் நிச்சயமாக அவரிடம் கூறுவேன் என தெரிவித்துள்ளார்.