வருங்கால மனைவி தற்கொலை செய்துகொண்டதால், மனமுடைந்து காணப்பட்ட இராணுவர் வீரரும் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் ராஜமாணிக்கம் அஸ்ஸாம் மாநிலத்தில் ராணுவ முகாமில் பணியாற்றி வந்தார். அவரது குடும்பத்தினரை சந்திப்பதற்காக 15 நாட்களுக்கு முன் அவர் ஊருக்கு வந்து விட்டு திரும்பிச் சென்றார்.
இதனிடையே அரக்கோணத்தில் உள்ள உறவுக்கார பெண்ணான கல்லூரி மாணவி ஒருவரை தீவிரமாக காதலித்து வந்த ராஜமாணிக்கத்துக்கு உறவினர்கள் திருமணம் செய்ய ஏற்பாடு செய்து பத்திரிகையும் அடித்து விட்டனர்.
ராஜமாணிக்கம் இரண்டு மாதங்களாக தமது வருங்கால மனைவியுடன் செல்போனில் பேசி மகிழ்ந்தார். இதற்கிடையில் எதிர்பாராத விதமாக குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த 2ம் தேதி அந்தப் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார். இந்த தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்த ராஜமாணிக்கம் ஊருக்கு வருவதாக தெரிவித்து விமான டிக்கட்டை எடுத்துள்ளார்.
ஆனால் திடீரென அவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டதாக அஸ்ஸாமில் இருந்து தகவல் வர ராஜமாணிக்கத்தின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
இந்த நிலையில் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்ட அவருடைய உடல் இராணுவ மரியாதையுடன் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.