இலங்கையின் உண்மையான உரிமையாளர்களான இலங்கை பௌத்த சிங்களவர்கள் தற்போது நாட்டில் வாடகை குடிகளாக மாறியுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று செய்தியாளர்களிடம் ஞானசார இதனை கூறியுள்ளார்.
நாட்டில் அமுல்படுத்த பொருத்தமான யோசனைகள் அடங்கிய “போகம்பர அறிக்கை” என்ற யோசனையை பொதுபல சேனா அமைப்பு ஸ்ரீ தலதா மாளிகையில், புத்தரின் புனித தந்தத்திடம் வைத்து வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளது.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட போதே ஞானசார தேரர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டுக்கு தகுதியான தலைமைத்துவம் இல்லாத காரணத்தினால், மக்கள் ஆதரவற்ற நிலைமைக்கு உள்ளாகியுள்ளனர்.
மஹா சங்க சபையினர் மற்றும் நான்கு சிங்கள குடிகள் இணைந்து பண்டைய சமூகத்தில் இருந்த சமூக நிலமையை ஏற்படுத்த வேண்டும்.
தகுதியான தலைவர் ஒருவர் இல்லாத காரணத்தினால், நாகரீகத்தால் சிங்கள தேசத்தை உருவாக்கி மக்கள் ஆதரவற்று காணப்படுகின்றனர்.
தாய் நாடு ஆதரவற்று அழுது புலம்பும் நேரத்தில் அதனை வழமை நிலைமைக்கு கொண்டு வர வேண்டும். வரலாற்று சிறப்புமிக்க இனம் என்ற வகையில் சிங்களவர்கள் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்களை எடுக்க முடியும்.
எதிர்கால பாதுகாப்பு மற்றும் கௌரவமான தேசத்தை பாதுகாக்க கூடிய வேலைத்திட்டங்களை இந்த யோசனைகள் மூலம் முன்வைத்துள்ளோம்.
தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து பகிரங்க சங்க சபையிலும், சமய குழுக்களுடனும், அரசியல் அணிகளுடனும் பொதுவிலும் கலந்துரையாடி தீர்மானிக்க பகிரங்க அழைப்பை விடுக்கின்றோம். நாடு தற்போது களியாட்ட களமாக மாறியுள்ளது.
எவரும் இதனை புறந்தள்ள முடியாது. அனைவரையும் ஓரிடத்தில் ஒன்று சேர்ப்பதே எமது நோக்கம் எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.