தமிழகத்தின் வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 18ம் திகதி தமிழகம் முழுவதும் மக்களவை தேர்தல் நடந்த நிலையில் வேலூரில் மட்டும் பணப்பட்டுவாடா புகார்கள் காரணமாக தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி வேலூர் தொகுதிக்கு தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதில் கடந்த முறை திமுக தரப்பில் போட்டியிடுவதாக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் தான் இந்த முறையும் போட்டியிடுகிறார்.
இதேபோல் அதிமுக கூட்டணி சார்பாக புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏசி சண்முகம் போட்டியிடுகிறார். இந்நிலையில் வேலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சீமான் வெளியிட்ட அறிக்கையில், நடைபெறவுள்ள வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் அன்புத்தங்கை தீபலட்சுமி போட்டியிடுவார் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள மக்களவை தொகுதிகளில் பாதிக்கு பாதி பெண் வேட்பாளர்களை தான் சீமான் நாம் தமிழர் கட்சி சார்பில் நிறுத்தினார்.
அதே போல மீண்டும் வேலூர் தொகுதியிலும் பெண் வேட்பாளருக்கு அவர் வாய்ப்பளித்துள்ளார்.