திண்டுக்கலில் மனைவியை கவர நினைத்த நண்பனை காருக்குள் வைத்து கணவன் தீர்த்து கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேடசந்தூரை சேர்ந்தவர் விவேக். அவர் தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். விவேக்கிற்கு சிவா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிவா, நண்பன் எனக் கூறி கொண்டு விவேக்கின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தபோது அவருடைய மனைவியை சிவா கவர நினைத்ததாகக் கூறப்படுகிறது.
விவேக் வீட்டில் இல்லாத சமயத்தை சிவா பயன்படுத்திக் கொண்டு விவேக்கின் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டு தன்னுடன் உறவு கொள்ளுமாறு வற்புறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. இதை தனது கணவர் விவேக்கிடம் கூறி அவரது மனைவி கதறி அழுதுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த விவேக், சிவாவை பல முறை எச்சரித்த போதும் அவர் கேட்காமல் தொடர்ந்து இந்த செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். எனவே சிவாவை கொலை செய்ய வேண்டும் என்று எண்ணிய விவேக், தனது நண்பர்கள் முனுசாமி, வடிவேலு ஆகியோரோடு சேர்ந்து கொண்டு திட்டம் தீட்டியுள்ளர்.
அதன்படி, நேற்று முன் தினம் ஊரில் நடைபெற்ற திருவிழாவில், சிவாவை கரகாட்டம் பார்க்க வருமாறு அழைத்துள்ளார். சிவா அங்கு செல்லவே அனைவரும் மது வாங்கிக் கொண்டு புங்கம்பாடி என்ற இடத்திற்கு சென்று குடித்துள்ளனர்.
சிவாவுக்கு போதை தலைக்கேறவே, அவரை மூன்று பேரும் கட்டையால் தாக்கியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்து விட்டு, காரில் தூக்கி போட்டு கணவாய் பகுதிக்கு கொண்டு சென்று காருடன் சேர்த்து எரித்துள்ளனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.