இக்கட்டான நிலைக்குள் சிக்கிய இந்தியா..!

உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மான்செஸ்டரில் நேற்று இடம்பெற்றது. மழையால் அந்த ஆட்டம் பாதிக்கப்பட்டதால் இன்று தொடர்கிறது.

நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பு ஆடிய நியூசிலாந்து அணி 46.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்ததால் போட்டி தடைபட்டது. அதன்பின்னர் மழை நிற்காததால், போட்டி நீண்ட நேரம் தடைபட்டிருந்தது. மழை ஒருமுறை நின்றதும் போட்டி தொடங்கப்பட வாய்ப்பிருந்த நிலையில், மீண்டும் மழை பெய்ததால் நேற்றைய ஆட்டம் நிறுத்தப்பட்டு ரிசர்வ் நாளான இன்று தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து இன்று பிற்பகல் வழக்கம்போல 3 மணிக்கு போட்டி தொடரும். நியூசிலாந்து அணி எஞ்சிய 23 பந்துகள் பேட்டிங் ஆடும். அதன்பின்னர் இந்திய அணி இலக்கை விரட்டும். இன்றும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே இன்று போட்டி தொடங்கியதும் நியூசிலாந்து அணியின் எஞ்சிய இன்னிங்ஸ் முடிந்த பின்னர் இந்திய அணி பேட்டிங் ஆடும். அப்போது மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கும்பட்சத்தில் இந்திய அணி டி.எல்.எஸ் முறைப்படி நிர்ணயிக்கப்படும் ஸ்கோரையும் கருத்தில்கொண்டு ஆட வேண்டும்.

இந்திய அணி ஆடும்போது குறைந்தது 20 ஓவர் ஆடியபின்னர் மழை வந்து ஆட்டம் தடைபட்டால் டி.எல்.எஸ் முறைப்படி நிர்ணயிக்கப்பட்ட ஸ்கோரின் அடிப்படையில் முடிவு அறிவிக்கப்படும். டி.எல்.எஸ்ஸின் படி நிர்ணயிக்கப்படும் ஸ்கோரையும் கருத்தில் கொண்டு ஆட வேண்டும், 50 ஓவருக்கு அடிக்க வேண்டிய ஒரிஜினல் இலக்கையும் கருத்தில் கொண்டு ஆட வேண்டும். இது சற்று கடினமான விஷயம்.நியூசிலாந்து அணி அதிகபட்சம் 250 ஓட்டங்கள் அடிக்கத்தான் வாய்ப்பிருக்கிறது. 50 ஓவர்களில் அந்த இலக்கை விரட்டுவது இந்திய அணிக்கு எளிது. ஆனால், மழை குறுக்கிடும்பட்சத்தில் டி.எல்.எஸ் படி இந்திய அணி 20 ஓவருக்கு அடிக்க வேண்டிய ஸ்கோர்,ஒருநாள் போட்டியில் பெரும்பாலும் 20 ஓவரில் அடிக்கப்படும் ஸ்கோரைவிட சற்று அதிகமாகவே இருக்கும்.எனவே, 50 ஓவர் இலக்கை விரட்டும் வகையில் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் நிதானமாக தொடங்கி நல்ல அடித்தளத்தை அமைத்து ஆடுவதா அல்லது டி.எல்.எஸ் இலக்கை விரட்டும் வகையில் அடித்து ஆடுவதா என்ற சந்தேகம் எழும். அது தொடக்க வீரர்களின் ஆட்ட உத்தியையும், திட்டத்தையும் பாதிக்கக்கூடும். ஆனாலும், இந்திய அணியில்  துடுப்பாட்ட வரிசை நன்றாக உள்ளதால் எந்த சூழலையும் சமாளிக்கும் வகையில்தான் நம்பிக்கையுடன் தான் ஆடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.