ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் ஐஎஸ் அமைப்பு இருக்கவில்லை என்றும், இது அனைத்துலக சக்தி ஒன்றின் வேலையே எனவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலரான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் நேற்றைய அமர்வில் சாட்சியளித்த போது, அவர் இவ்வாறு கூறினார்.
“சில நாடுகள் சிறிலங்கா விவகாரங்களில் தலையிடுகின்றன என்பது பொதுவான விடயம்..
இந்த தாக்குதலுக்குப் பின்னால் ஐஎஸ் அமைப்பு இருந்திருக்கும் என நான் நினைக்கவில்லை.
சில அனைத்துலக சக்திகள் சஹ்ரானை ஒரு கருவியாகப் பயன்படுத்தியுள்ளன. எனவே, தாக்குதல்களுக்குப் பின்னால் ஒரு அனைத்துலக சக்தி இருப்பதாக நான் நம்புகிறேன்.
தாஜ் சமுத்ரா விடுதியில் குண்டை வெடிக்க வைக்க வந்தவர் அங்கு தாக்குதல் நடத்தாமல் சென்றதற்கான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும்.
அந்த நேரத்தில் தாஜ் சமுத்ரா விடுதியில் இருந்தது யார் என்பதைக் கண்டறிவது ஒன்றும் கடினமான விடயம் அல்ல.
தற்கொலைக் குண்டை வெடிக்கவைக்கும் கருவி இயங்கவில்லையா அல்லது அல்லது அந்த நேரத்தில் விடுதியில் ‘குறிப்பிட்ட நபர்கள்’ இருப்பதால், கருவியை இயக்க வேண்டாம் என்று குண்டுவெடிப்பாளருக்கு அவரது தனது மேலிடத்தில் இருந்து ஏதேனும் உத்தரவு கிடைத்ததா என்பதைக் கண்டுபிடிப்பது கடினம் விடயம் அல்ல.
ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக தாஜ் சமுத்ரா விடுதியில் குண்டு வெடிக்கப்படாமல், காப்பாற்றப்பட்டதாக நான் சந்தேகிக்கிறேன் என்று மட்டுமே நான் கூறினேன்.
அங்கு யார் இருந்தார்கள் என்பது பற்றிய எந்த விவரங்களும் எனக்குத் தெரியாது. தாக்குதல் நடத்தியவர்கள் தாஜ் விடுதியை ஏன் காப்பாற்றினார்கள் என்பதை பாதுகாப்பு அமைப்புகளோ அல்லது நாடாளுமன்றத் தெரிவுக்குழுவோ தான் கண்டுபிடிக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.