இந்திய அணிக்கு பேரிழப்பு! இருவர் வெளியேறுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

விராட் கோலியின் தலைமையிலான இந்திய அணி 2019 உலகக் கோப்பையில் இருந்து நேற்றைய போட்டியுடன் வெளியேறியது. ரவீந்திர ஜடேஜா மற்றும் எம்.எஸ். தோனி போராட்டம் எல்லை கோட்டின் அருகே கொண்டு சென்றாலும் கோட்டினை கடக்க முடியவில்லை.

இந்த போட்டியுடன் அணியில் இருந்து விலகுவதாக, இந்திய அணியின் பேசப்படாத ஹீரோக்களாக வலம் வந்த பிசியோ பேட்ரிக் ஃபர்ஹாட் அறிவித்துள்ளார். அவர் கடந்த நான்கு வருடங்களாக இந்திய அணியுடன் இருந்த போது வீரர்களின் உடற்தகுதி சிறப்பாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

களத்தில் விளையாடும் இந்திய வீரர்களை தெரியும். ஆனால் துணை பணியாளர்களை தெரியாது. தற்போதைய உலகக் கோப்பை போட்டியில் சிறந்த பீல்டிங் அணிகளில் இந்தியா ஒன்றாகும். அதற்கு மிக அதிகமாக உழைத்தவர்கள் இவர்களே என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று இந்திய அணி களத்திலும் தோல்வி கண்டதுடன், பிசியோவும் விலகுவதாக அறிவித்தது அணிக்கு சோகமான நாளாக அமைந்தது

இதுகுறித்து, பேட்ரிக் ஃபர்ஹார்ட் தனது ட்விட்டர் கணக்கில், “இந்திய அணியுடன் எனது கடைசி நாள் நான் விரும்பியபடி அமையவில்லை என்றாலும், கடந்த 4 ஆண்டுகளாக அணியுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பிற்காக BCCI க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எதிர்கால இந்திய அணிக்கான வீரர்கள் மற்றும் ஆதரவு ஊழியர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவை சார்ந்த பேட்ரிக் ஃபர்ஹார்ட் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணியில் சேர்ந்தார், இந்த நான்கு ஆண்டுகளில் பல இந்திய வீரர்களின் உடற்பயிற்சி முறையை மேம்படுத்தியுள்ளார். அவர் உலக கிரிக்கெட்டில் மிகவும் மரியாதைக்குரிய நபராக திகழ்ந்த அவர் பெரும்பாலும் புன்னகையுடன் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் மற்றொரு துணை ஊழியரான ஷங்கர் பாசு இந்திய கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவதாக அறிவித்துள்ளார்.

இருவரின் விலகல் குறித்து இந்திய அணியின் கேப்டன் கோலி தன்னுடைய ட்விட்டரில், ” நீங்கள் இருவரும் அணிக்காக செய்த அற்புதமான பணிக்கு பேட்ரிக் மற்றும் பாசுவுக்கு நன்றி. அதைவிட முக்கியமாக, எங்கள் அனைவருடனும் நீங்கள் வைத்திருக்கும் நட்பு இன்னும் சிறப்பு வாய்ந்தது. நீங்கள் இருவரும் உண்மையான ஜென்டில்மென். உங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டங்கள் சிறப்பாக அமைய வாழ்த்துகள்” என கூறியுள்ளார்.