அவுஸ்திரேலிய தொழிற்சாலையில் தீவிபத்து! புலம்பெயர் தமிழர்கள் பாதிப்பு..!

மெல்பேர்னில் தமிழர்கள் உட்பட பெருமளவு புலம்பெயர் பின்னணி கொண்ட தொழிலாளர்கள் பணிபுரிந்த தொழிற்சாலையின் தாய் நிறுவனம் வங்குரோத்து நிலையடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அந்த தொழிற்சாலையில் பணியாற்றிய புலம்பெயர் தமிழர்கள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,

அண்மையில் பாரிய தீவிபத்துக்குள்ளான Campbellfield பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையின் பின்னணியிலுள்ள Bradbury Industrial Services நிறுவனமே இவ்வாறு வங்குரோத்துநிலையை அடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இரசாயனக்கழிவுகள் உள்ளிட்ட ஏனைய கழிவுப் பொருட்களை மீள்சுழற்சி செய்யும் குறிப்பிட்ட தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக பாரிய சேதம் ஏற்பட்டிருந்ததுடன் அங்கு பணிபுரிந்த அகதிப்பின்னணி கொண்ட இளைஞர் ஒருவர் கடும் காயங்களுடன் உயிர்தப்பியிருந்தார்.

அதேநேரம் குறிப்பிட்ட தொழிற்சாலையில் பணிபுரிந்த பல அகதி மற்றும் புலம்பெயர் பின்னணி கொண்ட தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் உரிய விசா இல்லாமல் பணிபுரிந்த பலர் சுரண்டலுக்குள்ளாக்கப்பட்டதாக தம்மிடம் முறையிட்டிருந்ததாகவும் புலம்பெயர் தொழிலாளர் மையம் தெரிவித்துள்ளது.

இவர்களது முறைப்பாட்டையடுத்து குறித்த தொழிற்சாலைக்கெதிராக Fairwork Commission உள்ளிட்டவற்றில் வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில் Bradbury Industrial Services நிறுவனம் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளதாகவும், இதனால் தமக்கு நீதிகேட்டு போராடிய தொழிலாளர்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் புலம்பெயர் தொழிலாளர் மையம் கூறியுள்ளது.

இதேவேளை குறிப்பிட்ட தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தினை கட்டுப்படுத்த 175 தீயணைப்பு வீரர்கள் போராடியிருந்ததுடன் இதனைச் சுத்திகரிப்பதற்கு பெருமளவு பணம் தேவைப்பட்டிருந்த பின்னணியில், தற்போது Bradbury Industrial Services நிறுவனம் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளதால் இதற்கான செலவு வரிசெலுத்துபவர்களின் தலையில் கட்டப்பட்டுள்ளதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bradbury Industrial Services நிறுவனம் தீர ஆராய்ந்த பின்னரே இக்கடினமான முடிவினை எடுத்தாக குறித்த நிறுவனத்தின் நிதிவிவகாரங்களைப் பொறுப்பேற்றுள்ள PKF என்ற நிறுவனம் தெரிவித்துள்ளதாக” அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளது.